அம்பேத்காரின் நினைவு நாளில் அரசியல் சக்தியாக உருவெடுக்க உறுதி ஏற்போம்


தலித் பெண்கள் சிறுபான்மை ஏழைகள் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று அம்பேத்காரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம் என்று சென்னையில் நடந்த விழாவில் தொல்.திருமாவளவன் பேசினார்.

அம்பேத்கார் படத்திற்கு மாலை
அம்பேத்கார் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை பெரியார் திடலில், தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடந்தது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்பேத்கார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொல்.திருமாவளவன் விழாவிற்கு தலைமை வகித்தார். ‘‘புரட்சியாளர் அம்பேத்காரும், சிறுபான்மையின ஜனநாயகமும்’’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:–
உழைக்கும் வன்னியர்கள்
காலம் காலமாக தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினரை ஆதிக்க சக்திகள் அடக்கிவருவது தொடர்கிறது. அந்தவரிசையில் தான் தர்மபுரி வன்கொடுமையும் நடந்துள்ளது. தர்மபுரியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நக்சல்பாரி இயக்கங்கள் சாதியை எதிர்த்தும், கந்து வட்டி கொடுமைகளை எதிர்த்தும் போராடி வந்தனர். இதனால் தலித்துகளும், உழைக்கும் வன்னியர்களும் இணைந்து ஒன்று சேர்ந்து ஒரே சக்தியாக உருவெடுத்தனர். இதனால் அங்கு இரட்டை குவளை முறை, மது, கந்துவட்டி முறைகள் ஒழிக்கப்பட்டது. இதனை பொருத்து கொள்ளாத ஆதிக்க சக்திகள் அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து பழி வாங்க காத்திருந்தனர்.
அரசியலில் சக்தியாக
இந்த சூழ்நிலையில் தான் சில அரசியல் கட்சியினர் சாதி உணர்வை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திவந்த சாதியவாதிகள், ஆதிகாரவர்க்கத்துடன், கந்துவட்டிகாரர்களின் பலமும் ஒன்று சேர்ந்து தர்மபுரியில் இந்த செயலை அறங்கேற்றி உள்ளனர். ஆகவே சமூகத்தில் பலவீனமானவர்களாக இருக்கும் தலித் பெண்கள் சிறுபான்மை ஏழைகள் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று அம்பேத்காரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.
முன்னதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொருளாளர் மு.முகமதுயூசுப் வரவேற்றார். விடுதலைசிறுத்தைகள் கட்சி கொள்கைபரப்பு து.செயலாளர் பாலாஜி, தி.மு.க.வை சேர்ந்த கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னாதாக டெல்லியில் காலை 9 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

0 comments:

கருத்துரையிடுக