தர்மபுரி கலவரம் சம்பந்தமான விசாரணையை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்ற வேண்டும்”


தர்மபுரி நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தலித் மக்களின் குடியிருப்புகள் மீது கடந்த 7-ந்தேதி வன்னிய சாதிவெறிக் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இத்தாக்குதலை கண்டித்து ம் வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மெமோரியல் ஹால் அருகில் இன்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டுஅவர் உரையாற்றுகையில், ” பணத்திற்காக காதல் செய்து ஏமாற்றுகிறார்கள் என்பது பொய், காதல் என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம், எந்த சாதியினராக இருந்தாலும் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது” எனத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் , ” தர்மபுரியில் ஆறு மணி நேரம் தொடர்ந்து கலவரம் நடைபெற்றும், இதனைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் குற்றம் சுமத்தினார். ”தர்மபுரியில் காதல் திருமணம் செய்தவர்களுக்கு வயது குறைவு என்பது பொய்யான தகவல்” என்று தெரிவித்த திருமாவளவன், "தர்மபுரி கலவரம் சம்பந்தமான விசாரணையை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இந்தக் கலவரத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற்போது எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். 
  
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

 தர்மபுரி மாவட்டத்தில் தலித் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சாதி வெறியர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம். ஏதோ உணர்ச்சி கொந்தளிப்பால் நடத்தப்பட்ட சம்பவம் அல்ல. ஒரு வன்முறை கும்பல் அரசியல் ஆதாயத்துக்காக இதை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
தொடர்ந்து 6 மணி நேரம் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அதுவரை அங்கு போலீசாரோ, வருவாய் துறை அதிகாரிகளோ வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இந்த வன்முறை சம்பவத்துக்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.
உள்ளூர் போலீசார் நடவடிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  ஒரு தலித் இளைஞன் காதல் கலப்பு திருமணம் செய்ததால் இந்த தாக்குதல் நடந்துள்ளது. காதல் என்பது இனம், மொழி, மதத்துக்கு அப்பாற்பட்டது. இதில் தனி நபர்கள் தலையிடுவது அநாகரீகமானது. ஜனநாயகத்துக்கு எதிரானது.
எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் விரும்பி திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த தீர்மானித்துவிட்டால் அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தமிழகம் முழுவதும் வன்முறையாளர்கள் மேடைபோட்டு பேசி வருகிறார்கள்.
ஆனால் இதுவரை அவர்கள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தமிழக அரசு சமூக விரோதிகளை தடை செய்ய வேண்டும். தாக்குதலை தடுக்க வேண்டும். 1989-ம் ஆண்டு வன் கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. 1995-ம் ஆண்டு அச்சட்டத்தை நடைமுறைப் படுத்தினார்கள்.
இன்று வரை 1 சதவீதத்தைதான் பயன்படுத்தியுள்ளனர். இந்த சட்டத்தை தலித் மக்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். இதை போலீசார்தான் தவறாக பயன்படுத்துகிறார்கள். வன்கொடுமை தடை சட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக