விடுதலைச் சிறுத்தைகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரித்து வாக்களிக்கும் தொல்.திருமாவளவன் அறிவிப்பு



சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு.  அதற்காக வணிகர் அமைப்புகளோடு அனைத்துவிதமான போராட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து நிற்கும்.  ஆனால், தற்போது இந்தப் பிரச்சனையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  அதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய  முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில்  விவாதிக்கப்பட வேண்டியது அவசியம்.  வணிகர்களின்  ஞாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு  மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள  வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் நாடாளுமன்றத்தில்  வலியுறுத்தும்.  அதேவேளையில், மத்திய அரசைக்  கவிழ்ப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும்  விடுதலைச் சிறுத்தைகள் துணை போகாது.  மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அகற்றப்பட்டால், மதச்சார்பற்ற வேறு அரசியல் கட்சிகள்  ஆட்சியமைக்கும் நிலை தற்போது இல்லை. காங்கிரஸ்  தலைமையிலான அரசை பலவீனப்படுத்துவது மதவாத  சக்திகளை ஊக்குவிப்பதற்கே வழிவகுக்கும். 

எனவே நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுமேயானால் விடுதலைச் சிறுத்தைகள் ஐக்கிய  முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரித்து வாக்களிக்கும்  என்று தெரிவித்துக்கொள்கிறேன்

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக