போலித் தமிழ்த்தேசியவாதிகளின் பிரச்சினை ஈழவிடுதலை அல்ல; கருணாநிதியா? ஜெயலலிதாவா? என்பதே
உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாள் உலகத்தமிழர்களால் போற்றப் படுகின்ற புனிதநாள்; மாவீரர் நாள்! மண்ணைக் காத்த, மானம்காத்த மகத்தான போராளிகளின் வீரவணக்க நாள்! இலட்சோப இலட்சக்கணக்கான விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் மாவீரர்கள் அனைவருக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இன்று நான், ஐரோப்பாவில் டென்மார்க் என்னும் நாட்டில் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு இசைவளித்திருந்தேன். திடீரென்று தவிர்க்க முடியாத காரணங்களால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. புது தில்லியிருந்து நான் கிளம்புவதாகப் பயணத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தத் தயாரிப்போடு புதுதில்லிக்குச் சென்றிருந்தேன். ஆனால், தவிர்க்க முடியாத ஒரு சூழலில் அந்தப் பயணத்தை நான் தவிர்க்க நேர்ந்துவிட்டது.
இந்த நிலையில்தான், இரண்டு நாள் இடை வெளியில் வன்னிஅரசு, அறிவமுதன் ஆகியோரை தொடர்புகொண்டு இந்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதனடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட உடனடி நிகழ்ச்சிதான் இது. இன்று தமிழகத்தில் பரவலாக விடுதலைச்சிறுத்தைகள் தன்னியல்பாக எழுச்சி பெற்று ஆங்காங்கே மாவீரர் நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். நான் இந்த நிகழ்ச்சிக்குப் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு கோவையிலிருந்து ஒரு தம்பி பேசினார், மாவட்டச்செயலாளரும் பேசினார், “மாவீரர் நாள் கொண்டாடியதற்காக எங்களைக் கைதுசெய்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் 60 பேர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறோம்” என்று சொன்னார்கள்.
பல்வேறு இடங்களில் இயக்கத் தோழர்கள் இந்த மாவீரர் நாளைக் கொண்டாடியதாக எனக்கு குறுஞ்செய்திகளை அலைபேசி வழியாக அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். அந்தவகையில், இன்றைக்கு சென்னை மாவட்டத்தின் சார்பில் இந்த மாவீரர் நாள் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு இந்த ஆவணப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது. வழக்கம்போல நாம் காவல்துறையை சந்தித்துவிட்டுத்தான் களத்திற்குப் போகவேண்டிய நிலை. காவல்துறையோடு உரசாமல் எப்போதும் நாம் எந்த நிகழ்ச்சியையும் நடத்தியதே இல்லை. அந்த உரசல் இதிலேயும் வந்தது. அதிகாரிகள் இந்தப் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை மிரட்டி பூட்டுப்போட்டுவிடுவோம் என்றெல்லாம் அச்சுறுத்தியிருக்கின்றனர். நான் வெளிநாட்டில் இருப்பதாகத்தான் கட்சியின் தோழர்களே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு ஆவணப்படம் வெளியிடப்போகிறோம் என்று யாருக்கும் சொல்லவில்லை, சொல்லவும்கூடாது என்று நான் கமுக்கமாக ஒரு கட்டளையும் இட்டிருந்தேன்.
ஒன்றிரண்டு பேருக்கு மட்டும்தான் ஒன்றரை நாட்களுக்கு முன்பு சொல்லப்பட்டது. அந்த இருவரில் ஒருவர் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் மற்றொருவர் நம்முடைய மக்கள் பாவலர் இன்குலாப். ஆனால், எப்படியோ காவல்துறை மோப்பம் பிடித்து விட்டது. நம்மை மோப்பம் பிடிப்பதிலே மட்டும் அவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். காவல்துறையினர் நேராக இந்தப் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரையும், நிர்வாகத்தையும் உருட்டிமிரட்டி இதை நடத்தவிடாமல் தடுப்பதற்கான வேலைகளையெல்லாம் செய்தார்கள். பிறகு தோழர் இரவிக்குமார் அவர்களும் மற்றவர்களும் உயர் அதிகாரிகளிடம் முறையிட்ட பின்னர், இந்த ஆவணப்படத்தை கொடுங்கள் நாங்கள் பார்த்துவிட்டுத்தான் அனுமதிப்போம் என்றனர். அதன்படி அவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, அதைப்பார்த்து சரி என்று அனுமதித்த பிறகுதான் இங்கே இந்நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது.
மக்கள் பாவலர் இன்குலாப் அவர்களும், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்று நம்முடைய காயம்பட்ட உணர்வுகளுக்கு மருந்திட்டிருக்கிறார்கள். அதற்காக நான் இருவருக்கும் இந்தச் சூழலில் நன்றிசொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழீழ விடுதலைப்புலிகள் களப்பலியான அனைத்து மாவீரர்களையும் போற்றுகின்ற நாளாக, அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற நாளாக இந்த நாளைத் தெரிவுசெய்து அறிவித்திருக்கிறார்கள். மேதகு பிரபாகரன் அவர்கள் முதல் மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றபோது ‘இதனை ஏன் அறிவிக்கிறேன்’ என்கிற விளக்கத்தைச் சொன்னார். எத்தனை ஆயிரம்பேர் களப்பலியானாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பிலே இருந்தாலும், தளபதிகளாக இருந்தாலும் அனைவரும் சமமானவர்கள்தான் என்பதை நடைமுறையில் காட்டுவதற்காகத்தான் இந்த ஒரு நாளை மாவீரர் நாளாக அறிவிக்கிறோம் என்று அவர் விளக்கினார்.
ஒவ்வொருவரும் வெவ்வேறு நாளில் இறந்திருக்கிறார்கள். கிட்டு இறந்த நாள் ஒருநாள், திலீபன் இறந்த நாள் இன்னொரு நாள், சார்லஸ் அந்தோணி இறந்த நாள் மற்றொரு நாள். இப்படி படைத் தளபதிகள், படைவீரர்கள் வெவ்வேறு நாட்களில் இறந்திருக்கிறார்கள். அதில் எந்த நாளை சிறப்பான நாளாக கொண்டாடுவது? தளபதிகளின் நாளையா? படைவீரர்களின் நாளையா? பெண் புலிகள் மாலதி இறந்த நாளையா? அங்கயற்கண்ணி மாண்ட நாளையா? எந்த நாட்களுக்கு சிறப்பு அளிப்பது?
ஆகவேதான், அனைத்து மாவீரர்களுக்கும் சிறப்பு அளிக்கக்கூடிய வகையில் ஒற்றை நாளை அறிவித்தார். அந்த நாள்தான் நவம்பர் 27. இது முதன்முதலில் களப் பலியான தோழர் சங்கர் வீரச்சாவடைந்த நாள். ஈழத்தில் காயம்பட்டுத் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெற்று பலன் இல்லாமல் களப்பலியான முதல் புலி, தோழர் சங்கர். அவருடைய நினைவுநாள்தான் நவம்பர் 27’ 1982.
மேதகு பிரபாகரன் அவர்கள் இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது 17 அல்லது 18 வயது. சின்னஞ்சிறிய வயதிலே தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். அப்போது ‘புதிய புலிகள்’ என்றுதான் அதற்குப் பெயர். அதற்குப்பிறகுதான் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 30ஆவது வயதில் அவர் உலகமறிந்த ஒரு மாபெரும் படைத்தலைவராக உருப்பெறுகிறார். அந்தக் காலக்கட்டம்தான் அவர் இலங்கை அரசால், இந்திய அரசால் இன்னும் உலக அரசுகளால் குறிவைக்கப்படுகின்ற ஒரு ‘கெரில்லா’ போராளியாக அடையாளப்படுத்தப்படுகிறார். அவ்வாறு தலைமறைவாக இருந்து விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச்சென்ற சூழலிலும் களப்பலியாகின்ற ஒவ்வொருவரையும் வரலாற்றில் பதிவுசெய்ய வேண்டும்; அவர்களுக்குரிய மதிப்பை, சிறப்பைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்து பதிவுசெய்யும்படி ஆணையிட்டார்.
இராணுவத்தில் எத்தனைபேர் இறந்தார்கள் என்கிற கணக்கைக்கூட இராணுவத்தால் சொல்லமுடியாது, என் பிள்ளையைக் காணவில்லையென்று யாராவது கேட்டால்தான் தேடிப்பார்த்து இல்லை என்று சொல்லுவார்கள். இல்லையென்றால் அது கணக்கிலே வராது. ஆனால், தமிழீழ விடுதலைக்களத்தில் எத்தனைப் போராளிகள் இறந்தார்கள் என்பது புலிகளின் கணக்கில் ஒன்றுகூடத் தவறாமல் பதிவு செய்யப் பட்டிருந்தது.
‘மாவீரர் துயிலும் இல்லங்கள்’ என்னும் கல்லறைகள் வடிவமைக் கப்பட்டு அவை புனிதபூமியாகப் பராமரிக்கப்பட்டன. அதைப்பற்றியெல்லாம் பேசினால் மணிக்கணக்கிலே நேரம் நீளும். அப்படிப்பட்ட போராளிகளின், மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவதற்கான ஒரு நாளாக உலக அரங்கில் அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கின்ற ஒரு நாளாக நவம்பர் 27ஐ மேதகு பிரபாகரன் அவர்கள் மாற்றினார்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27இல் அவர் ஆற்றுகின்ற மாவீரர் நாள் உரை எதிரிகளால் கவனிக்கப்பட்டது. எதிரிகளுக்கு துணைநிற்கின்ற நாடுகளால், அரசுகளால் கவனிக்கப்பட்டன. அடுத்த ஆண்டின் செயல் திட்டம் என்ன என்பது பிரகடனப்படுத்தப்படும். கடந்த காலங்களில் ஆற்றிய பணிகள் அதிலே பட்டியலிடப்படும். தம்முடைய நோக்கம் என்ன? வலிமை என்ன? என்பது அறிவிக்கப்படும். ஆகவே, தமிழர்கள் அதை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதைவிட, பகைவர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். பகைவர்களின் நண்பர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அப்படி 1989லிருந்து தொடர்ந்து 2008 வரையில் ஒவ்வொரு மாவீரர் நாளிலும் அவர் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றுவது உண்டு. இன்று உலகமே எதிர்பார்த்தது. மேதகு பிரபாகரன் அவர்கள் எங்கோ ஒரு மூலையிலிருந்து தமிழினத்திற்கு ஏதோ ஒரு செய்தியைத் தரப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு உலகமெங்கிலும் விரவிப் பரவியிருந்தது.
ஆனால், தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அறிக்கை வந்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. 1989லிருந்து 2008 வரையில் அவர் ஆற்றிய உரைகள், அவர் கொடுத்த நேர்காணல்கள் இவற்றையெல்லாம் தொகுத்துப்பார்த்தால், மக்கள் பாவலர் இன்குலாப் இங்கே பேசும்போது யார் யாரோ என்னென்னவோ விமர்சனங்களையெல்லாம் செய்கிறார்கள் என்று சொன்னாரே அந்த விமர்சனங்களுக்கெல்லாம் அதிலே விடை கிடைக்கும். ஆனால், அதைப் படிக்காமல் விமர்சிக்கிறார்கள்.
அவர் ஒரு பயங்கரவாதி என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் ஒரு விடுதலை இயக்கம்; வெகுமக்கள் இயக்கம் என்பதை நிலைநாட்டுவதில்தான் நாம் தோற்றுப்போய்விட்டோம். அதாவது அது பயங்கரவாத இயக்கம் அல்ல என்பதை நிலைநாட்டுவதிலே நாம் தோற்றுப் போய் விட்டோம். இந்த உண்மையை உலக நாடுகள் எல்லாம் ஏற்றுக் கொண்டனவா என்பதைவிட, இந்திய நாடே ஏற்றுக் கொண்டதா என்பதைவிட, தமிழ்நாட்டிலே எந்த அளவிற்கு அதை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது கவனத்தில்கொள்ள வேண்டியதாகும். தமிழ்நாட்டில் தமிழீழத்தையும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கின்ற கட்சிகள் எத்தனை? சிலபேர் “தமிழீழத்தை ஆதரிப்போம்; ஆனால், புலிகளை ஆதரிக்கமாட்டோம்” என்பார்கள்! சிலபேர் “நாங்கள் தமிழீழத்தையும் ஆதரிக்கமாட்டோம்; புலிகளையும் ஆதரிக்கமாட்டோம்! மனிதாபிமான அடிப்படையிலே உதவிகள் செய்யலாம்; அதை ஆதரிக்கிறோம்” என்பார்கள்!
புரட்சிகர இயக்கங்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கின்ற இடதுசாரிகள்கூட இதுவரையில் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. கருத்தியல் அடிப்படையில்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனை இலட்சம்பேர் மாண்டொழிந்த பிறகும்கூட தோழர் வரதராசன் மற்றும் தா.பாண்டியன் ஆகியோர் என்ன சொல்கிறார்கள் என்றால், சிங்களவர்களுக்கான ஒற்றை ஆட்சியில் தமிழர்களுக்கான உரிமைதான் ஞாயமானது என்கின்றனர். தமிழீழத்தையும் புலிகளையும் ஆதரிக்கிறார்களா? இல்லையா? என்பது வேறு. கருத்தியல் அடிப்படையிலே தமிழ்த்தேசிய இனம் ஒரு தனித்தேசிய இனம் என்பதை அங்கீரிக்க வேண்டும் என்பதுதானே போராட்டம்.
வட்டுக்கோட்டை தீர்மானம் சொல்லுவது என்ன? இந்த மண்ணின் பூர்வீகக்குடிகளாக தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழர்கள் ஒரு தேசிய இனத்திற்குரிய அனைத்துப் பண்புகளையும் பெற்றிருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதானே வட்டுக்கோட்டைத் தீர்மானம்.
1976இல் ஈழத்தந்தை செல்வா அவர்களின் தலைமையில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதைத்தானே சொல்லுகிறது. அந்தத் தீர்மானம் பிரபாகரன் அவர்களால் இயற்றப்பட்ட தீர்மானம் அல்லவே. தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். தமிழர்கள் தங்களுக்கான இறையாண்மை உள்ள ஓர் அரசை உருவாக்கிக்கொள்வதற்கு ஒன்றுபட வேண்டும். இதுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானம்.
மேதகு பிரபாகரன் அவர்களிடத்திலே ஒருவர் கேட்கிறார், ‘நீங்கள் இப்படி ஒரு ஆயுதம்தாங்கிய போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய தேவை ஏன் வந்தது?’ என்று! “எம்மினம் சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைகளால் ஒடுக்குமுறைகளால் கொடூரமாக நசுக்கப்பட்டு வருகிறது. நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் என்னை இந்த நிலைக்குத் தள்ளியது. கொழும்பில் எனக்கு உறவுக்கார அம்மா ஒருவர் தங்கியிருந்தார். அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தபோது சொன்னார், 1958ல் நடந்த கலவரத்தின்போது எங்கள் வீட்டிற்குள்ளே புகுந்து சிங்கள இனவெறியர்கள் கொடூரமாகத் தாக்கினார்கள். என் பிள்ளையையும், என் கணவரையும் அவர்கள் என் கண் முன்னால் படுகொலை செய்தார்கள். நான் மட்டும் சன்னல் வழியாகத் தாவிக்குதித்து அந்த கொழும்பு வீதிகளில் அலறியடித்துக்கொண்டு தப்பித்து வந்துசேர்ந்தேன் என்று அந்த அம்மா சொன்னது என் நெஞ்சைப் பிழிந்தது. ஆகவே, ஓர் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தின் மூலம்தான், தமிழினத்தைப் பாதுகாக்கமுடியும் என்கிற உந்துதல் எனக்குள் ஏற்பட்டது” என்று பிரபாகரன் பதில் கூறியிருக்கிறார்.
பிரபாகரனை உருவாக்கியது யார்? தமிழீழ விடுதலைப்புலிகளை உருவாக்கியது யார்? பெரும்பான்மை என்னும் ஆணவத்தில் பேரினவாத அடக்குமுறை, தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் மீது திணிக்கப்பட்டது.
ஏறத்தாழ ஒரு கோடிக்கு மேலான சிங்கள வர்கள் வசிக்கின்ற தீவில் சுமார் 40 இலட்சம் தமிழர்களைக் கொண்ட ஒரு சிறுபான்மைச் சமூகமாக தமிழினம் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பௌத்தம் அங்கேயுள்ள பெரும்பான்மை மக்களின் மதம். சிங்களவர்கள் அங்கேயுள்ள பெரும்பான்மை இனம். ஆகவே, அது பேரினவாதமாகவும் பெருமதவாதமாகவும் உருவெடுத்து பேராதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த மண்ணை சிங்கள பௌத்தர்கள் மட்டும்தான் ஆளமுடியும்; இந்த தீவு சிங்களத் தீவுதான் என்று சிங்களவர்கள் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் சொல்லுகிறது.
‘ஒல்லாந்தர்கள்’ எனப்படும் ஆலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆண்டார்கள். ‘டச்சுக்காரர்கள்’ எனப் படும் ஜெர்மனியைச் சார்ந்தவர்கள் ஆண்டார்கள்! போர்த்துக்கீசியர்கள் ஆண்டார்கள்! இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள். 1948இல் அவர்கள் ஆட்சியதிகாரத்தை சிங்களப் பேரினவாதிகளிடம் ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டார்கள். எங்களுக்குத் தனியே பாகிஸ்தான் வேண்டும் என்று போராடிய இசுலாமியத் தலைவர்களைப் போல, தமிழர்களுக்கு ஒரு தனித்தேசம் வேண்டும் என்று போராடுகின்ற தமிழினத் தலைவர்கள் அன்று இல்லாமல் போய்விட்டனர். இந்தியாவைச் சார்ந்த காங்கிரசுக் கட்சியின் கிளையை அங்கேயும் உருவாக்கிய, மிதவாதத் தலைவர்கள்தான் அன்றைக்கு தமிழினத்திற்குத் தலைமை கொடுத்தனர். காந்தியைத் தலைவராகக் கொண்ட அந்தக் காங்கிரசுக்கு இலங்கைக் கிளையின் தலை வர்கள்தான், ஜி.ஜி.பொன்னம்பலங்களாக, அருணாச்சலங்களாக, இராமநாதன்களாக அந்தக் காலத்தில் இருந்தவர்கள்.
அவர்கள் சிங்களவர்களை நயந்து தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பினார்கள். தங்களுக்கென ஒரு தனித் தேசம் வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கவில்லை, அதற்கான கருத்து உருவாகவில்லை.
காங்கிரசுக் கட்சியில் இருந்தவர்தான் செல்வநாயகம். ஆனால், அவர் அதிலிருந்து வெளியேறிவந்து தான் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். அவர் உருவாக்கிய கூட்டமைப்பின் சார்பிலே நடத்தப்பட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் வட்டுக்கோட்டை தீர்மானம். அந்தத் தீர்மானம்தான், ‘நாங்கள் ஒரு தனித்தேசிய இனம். எங்களுக்கான இறையாண்மையுள்ள ஓர் அரசை உருவாக்கிக் கொள்வதற்கு எங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்று சொல்லுகிறது. அதன் ஆயுத வடிவம்தான்; அதன் செயல்வடிவம்தான், அதன் நடைமுறை வடிவம்தான் மேதகு பிரபாகரன்! அதன் பிறகு அந்த யுத்தம் எவ்வளவோ மிகப்பெரிய பரிணாமத்தைப் பெற்றது.
உலக நாடுகளின் வரலாற்றையெல்லாம் அறியாமல் தேசிய இன விடுதலைப் போராட்டங்களைப் பற்றியெல்லாம் அறியாமல் மார்க்சியத்தைப் பற்றிய புரிதலே இல்லாமல் அவர் ஏதோ ஆயுதம் ஏந்தி தனக்கு விளம்பரம் வேண்டும்; புகழ்வேண்டும் என்பதற்காக சிலபேரை குழுவாக திரட்டிவைத்து கொண்டு வன்முறை செய்கிறார் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டனர்.
அவரிடத்தில் 1984 - 85ல் கேள்வி கேட்கிறார்கள், “உங்களுடைய நண்பன் யார்? உங்களுடைய வழிகாட்டி யார்? உங்களுடைய தத்துவ ஆசிரியர் யார்?” என்று கேட்கிறார்கள். அப்போது அவருக்கு 30 வயது. அந்தக் காலத்தில் அவர் சொல்லுகிறார்: “இயற்கைதான் எனக்கு நண்பன்; வாழ்க்கைதான் எனக்கு தத்துவ ஆசிரியர்; வரலாறுதான் எனக்கு வழிகாட்டி!” என்று சொல்லியிருக்கிறார்.
இயற்கையிலே சுயம்புவாகத் தோன்றிய ஒரு விடுதலைப் போராளி அவர். ஆனால், அவரைப் பயங்கரவாதி என்று உலகம் கருதிவிட்டது. உலகச் சூழல்கள் அப்படி மாறிப்போய்விட்டன. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு வெகுசன இயக்கம்; ஒரு விடுதலை இயக்கம் என்று நிலைநாட்டுவதிலே தான் நாம் தோற்றுப்போயிருக்கிறோம். எதிரிகள் மிக இலகுவாக உலக நாடுகளின் துணையைத் தேடிக்கொண்டார்கள். இந்த ஆவணப்படத்திலே ஒரு இளைஞர் ஆவேசமாகச் சொல்கிறார், “எங்களை வைத்து இந்தியாவும் உலக நாடுகளும் பகடை ஆடுகிறார்கள்; பிராந்திய நலனுக்காக இந்தியா எங்களை பழிவாங்குகிறது” என்று கூறுகிறார். இதில் எவ்வளவு பெரிய உண்மை புதைந்து கிடக்கிறது என்பதை நாம் உணரவேண்டும்.
இந்திராகாந்தி அம்மையார் முதன்முதலாக இந்தப் பிரச்சினையில் எப்போது தலையிட்டார்? சிங்கள அதிபர் ஜெயவர்த்தனாவை அச்சுறுத்தவேண்டும்; அடக்கிவைக்க வேண்டும் என்பதற்கான ஒரு சூழல் எழுந்தபோதுதான் முதன்முறையாக அவர் தலையிடுகிறார். அதுவரையில் அது உள்நாட்டுப் பிரச்னையாகத்தான் பேசப்பட்டது. ஸ்ரீமாவோ பண்டாரா நாயக்கா, இந்திராகாந்திக்கு நெருக்கமான தோழி. பண்டாரா நாயக்காவின் எதிரி ஜெயவர்த்தனா.
ஜெயவர்த்தனா அப்போது உலக நாடுகளின் உதவியைப் பெறுவதில் - குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான சீன நாட்டோடும் பிற நாடுகளோடும் - நெருக்கமான உறவுகளை வைத்துக்கொண்டார். பொருளாதார உறவாலும், அரசியல் உறவாலும் இலங்கை நம்முடைய எதிரிகளோடு நெருங்குகிறது என்பதைப் புரிந்துகொண்ட நேரத்தில்தான் இந்திராகாந்தி அதில் வலிந்து தலையிடுகிறார். அப்போதுதான் தமிழீழத்திற் கான போராளிக் குழுக்களையெல்லாம் ஒன்றுசேர்த்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து பயிற்சி கொடுத்தார். பயிற்சி வேண்டுமென யார் கேட்டது? பிரபாகரன் கேட்டாரா? சபாரத்தினம் கேட்டாரா? பத்மநாபா கேட்டாரா? யார் கேட்டது? இந்திராகாந்தி வலிந்துபோய் பயிற்சி கொடுத்தார். ஏனெனில், இந்தியாவுக்கு அடிபணியும் நாடாக இலங்கை இருக்கவேண்டும்; அதன் அதிபர் ஜெயவர்த்தனா இருக்க வேண்டும், அடுத்து வருகின்ற அதிபர்களும் அவ்வாறு இருக்கவேண்டும் என்கிற ஆதிக்கவெறிதான் இந்திய அரசின் - இந்திராகாந்தியின் போக்காக இருந்தது.
இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, இலங்கையை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய ஜெயவர்த்தனாவை அச்சுறுத்துவதற்காக, இந்திராகாந்தி ஆக்கிரமிப்பு உணர்வோடு ஆதிக்க வெறியோடு இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு போராளிக்குழுக்களை யெல்லாம் இங்கே கொண்டுவந்து பயிற்சி கொடுத்தார்.
பயிற்சி எதற்காக கொடுக்கப்பட்டது என்றால், மறைமுகமாக ஜெயவர்த்தனாவை மிரட்டுவதற்காக! ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருந்தார். நாங்கள் உங்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல; விடுதலைப்புலிகள் என்பதை உணர்த்துகின்ற ஒரு போராளித் தலைவராக இருந்தார்; அவர்தான் மேதகு பிரபாகரன்!
இந்திய அரசின் பொம்மைகளாக செயல்படமறுத்த காரணத்தால், இந்திரா காந்தி காலத்திலேயே விடுதலைப் புலிகளை ஒழிக்கவேண்டும் என்கிற எண்ணம் இந்திய உளவுத்துறைக்கு ஏற்பட்டது. புலிகளைத்தவிர மற்றவர் களெல்லாம் இந்திய அரசோடு மிக எளிதில் சமரசமாகிவிட்டார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டார்கள். அவர்கள் விரும்பியபடி நடந்தார்கள். ஆனால், “எங்கள் ஒரே குறிக்கோள் தமிழீழம்தான். நாங்கள் ஆயுதம் ஏந்தியிருப்பது உங்களின் நலனுக்காக அல்ல, எங்களின் விடுதலைக்காக மட்டுமே” என்பதில் உறுதியாக நின்றவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்.
இந்திராகாந்தி அம்மையார் காலத்திலிருந்தே நமக்கு உலை வைக்கப்பட்டு விட்டது, குழிதோண்டப்பட்டு விட்டது. மேதகு பிரபாகரன் அவர்கள், அமெரிக்கா என்ன அடிப்படையிலே சிங்களவர்களுக்கு உதவுகிறது? என்ற ஒரு கேள்விக்கு ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் திருகோணமலையில் ஒரு நிலையான கடற்படைத் தளத்தை அமைத்துக்கொள்ள வேண்டுமென இந்துமகா சமுத்திரத்திற்குள் தமது ஆளுமையை நிலைநாட்டிக்கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறது. அதனால், அமெரிக்கா சிங்கள ஆட்சியாளர்களை ஆதரிக்கிறது என்று சொன்னார். அதாவது, அமெரிக்காவிற்கு ஒரு நலன் இருக்கிறது. இலங்கைத் தீவில் இருக்கின்ற திருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை அமைத்துக்கொண்டால், தெற்காசியப் பிராந்தியத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளையே அச்சுறுத்த முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.
ஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையிடுகின்ற போதெல்லாம் அமெரிக்காவின் அடிவருடி நாடுகளெல்லாம் தலையிடுகின்றன. புலிகளுக்கு எதிராக அமெரிக்கா தடைவிதித்த காரணத்தினால் அமெரிக்காவின் அடிவருடி நாடுகளெல்லாம் தடைவிதித்தன; தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, இந்தியாவும் தடைவிதித்தது; ராஜீவ்காந்தி படுகொலைக்காக அல்ல; அமெரிக்காவுக்காக! உள்ளூர்ப் பகையை வைத்து அரசியல் செய்யக்கூடியவர்கள் திரும்பத் திரும்ப சொல்லுகின்ற காரணம், இராஜீவ் காந்தியை படுகொலை செய்ததனால் இந்தியா ஆத்திரமடைந்தது, தடைவிதித்தது என்று. அம்மா ஜெயலலிதா, ‘நான்தான் தடைவிதிக்கச் சொன்னேன்’ என்று மார்தட்டி சொல்லுவார். இவர் சொன்னதனால் தடைவிதிக்கப்பட்டது என்ற பெருமை அவருக்கு. பிரபாகரனைப் பிடித்துவந்து கூண்டில் ஏற்ற வேண்டும்; விசாரித்துத் தண்டிக்க வேண்டும்; தூக்கிலேற்ற வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதா தலைமையில் ஈழத்தை வென்றெடுப்போம் என்று இங்கே சில தமிழ்த்தேசியவாதிகள் பேசினார்கள். திருமாவளவன் தப்பு செய்துவிட்டானாம்; அம்மா காலடியில்போய் விழவில்லையாம், ஈழத்தை வென்றெடுப்பதற்காக! அம்மாவிடம் போயிருந்தால் ஈழத்தை வென்றெடுத்திருக்க முடியுமாம்! திமுகவோடு இருந்ததனால்தான் ஈழத்தை வென்றெடுக்க முடியாமல் போனதாம். திமுகவோடு நான் சேர்ந்ததனால்தான் ஒட்டமொத்தத்திலே புலிகளே தோற்றுப்போனார்களாம். போரை நிறுத்த முடியாமல்போய்விட்டதாம். எவ்வளவு கேவலமான கொச்சையான விமர்சனங்கள்!
தமிழ்நாட்டில் போலித் தமிழ்த்தேசியவாதிகள் எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்று இந்த இக்கட்டான நேரத்தில்தான் நான் புரிந்துகொண்டேன். நான் ஒரு கூட்டணியில் இருந்துகொண்டே கூட்டணியைப் பற்றி கவலைப்படாமல் வெளியே வந்தேன். வைகோ அதிமுக அணியிலே இருக்கிறார்; தா.பாண்டியன் அதிமுக அணியிலே இருக்கிறார்; பழ.நெடுமாறன் அதிமுக அணிக்காகவே வேலை செய்கிறார்; பா.ம.க., திமுக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது. அது அதிமுக பக்கம் பயணிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் திமுக என்ன நினைத்தாலும் சரி, கூட்டணியை விட்டே தூக்கி யெறிந்தாலும் சரி, அதைப்பற்றி கவலைப்படாமல் இவர்களோடு சேர்ந்து நின்றவன் திருமாவளவன்.
ஆனால், திருமாவளவன் மீது கொச்சையான விமர்சனங்கள். இவ்வாறு விமர்சிப்பவர்கள், போலித் தமிழ்த் தேசியவாதிகள்கூட அல்ல; சாதியத் தமிழ்த் தேசியவாதிகள். வேறு என்ன நான் சொல்லமுடியும்? உண்மையாய், நேர்மையாய் களத்தில் நின்றேன். 5 ஆண்டுகாலம் காங்கிரசாரோடு இருந்து அத்தனை அதிகாரத்தையும் சுவைத்துக் கொண்டிருந்த பா.ம.க. எடுத்த நிலை சரியாம்! அப்போதும் அங்கே யுத்தம் நடந்து கொண்டிருந்தது! அங்கே இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது! அங்கே தலைகள் உருண்டு கொண்டிருந்தன! அங்கே உலகப் படைகள் எல்லாம் திரண்டுபோய் எம் மக்களை அழித்துக்கொண்டிருந்தன. ஆனாலும், பா.ம.க. காங்கிரசில்தான் ஒட்டிக்கொண்டிருந்தது. அதிகாரத்தைச் சுவைத்துக்கொண்டிருந்தது, ஆனால், இன்றைக்கும் அந்த பா.ம.க.வோடு இணக்கமாக இருக்கின்றனர் தமிழ்த் தேசியவாதிகள். திமுக கூட்டணியில் இருந்தாலும் திருமாவளவன் அடங்கமறுக்கிறான் என்பதைப் புரிந்தும் அவர்கள் கொச்சையாக விமர்சிக்கிறார்கள்.
ஈழம் விடுதலை பெறவேண்டும் என்பதைவிட, இனம் காக்கப்பட வேண்டும் என்பதைவிட கருணாநிதியா - ஜெயலலிதாவா என்கிற அரசியலை தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியவாதிகள் செய்தார்கள்.
நான் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு சனவரி 2ஆம் தேதியே வெளியே வந்தேன். தமிழ்த் தேசியவாதிகளை ஒன்றுபடுத்த முயற்சித்தேன். ‘பொங்கல் விழா வேண்டாம்’ என்று சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தேன். இந்தப் போராட்டத்தை பயன்படுத்தி, இந்த ஒரு தீப்பொறியைப் பயன்படுத்தி தமிழகத்தையே கொந்தளிக்கச் செய்திருக்க முடியும். திருமாவளவன் நடத்திய அந்தப் போராட்டத்தையே பயன்படுத்தி அவர்கள் அனைவரும் களத்தில் இறங்கியிருந்தால் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் உருவாக்கியிருக்க முடியும்.
என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளைத் தவிர, வேறு யாராவது ஒரே ஒரு தமிழ்த் தேசியவாதியாவது களத்தில் நின்று கல் எடுத்தானா? கண்ணாடி உடைத்தானா? சிறைச் சாலைக்குப் போனானா? 316பேர் சிறைக்குப் போனது விடுதலைச்சிறுத்தைகள் மட்டும்தான். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்துக் களம் போனால் அது திருமாவளவனுக்குப் பெயர் வந்துவிடும் என்று தமிழ்த் தேசியவாதிகள் களமிறங்கத் தயங்கினர். திருமாவளவன் பெயரைச்சொல்லி தமிழ்நாடு முழுக்க சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கியிருந்தால், திமுக கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கும்! அதைச்செய்யவும் இவர்களுக்கு மனமில்லை. என்ன ஆனாலும் கருணாநிதியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்தார்களே தவிர போராட்டத்தைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இல்லை.
ஜெயலலிதாவுக்கு அந்த எண்ணம் இருக்காது. ஏன் பழ.நெடுமாறன் அவர்களுக்கு இல்லாமல் போனது? ஏன் இராமதாசு அவர்களுக்கு இல்லாமல் போனது? அந்த இடத்திற்கு வந்து ஓர் ஆறுதல் சொல்வதற்கு, வாழ்த்துச் சொல்வதற்கு ஏன் வைகோ அவர்களால் முடியாமல் போனது? இங்கே வந்துவிட்டால் ஜெயலலிதா என்ன உங்கள் சொத்தையெல்லாம் சேர்த்து எழுதி வாங்கிக் கொள்வாரா? அரசியலில் இருக்கக்கூடாது என்று உங்களை விரட்டியடித்துவிடுவாரா? திருமாவளவனின் மேடைக்கு வர அஞ்சினார் வைகோ. வந்து வாழ்த்தவில்லை.
யார் அரசியல் செய்தது? திருமாவளவனா அரசியல் செய்தான்? திமுக கூட்டணியில் இருந்து கொண்டே உண்ணாவிரதப் போராட்டத்தை எடுத்தான். ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்துகொண்டே நெருக்கடியைத் தருகிறான் என்று அவர்கள் வேதனைப்பட்டார்கள். நடவடிக்கை எடுக்கவும் விரும்பவில்லை, தடுக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 316 சிறுத்தைகள் கைது செய்யப்பட்டு 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்திலே சிறைப்படுத்தப்பட்டார்கள். இந்த உண்மைகளை யார் எழுதியது? எந்த ஊடகம் காட்டியது?
தமிழ்நாட்டில் எவ்வளவு போலித் தமிழ்த் தேசியவாதிகள் இருக்கிறார்கள் என்பதை அந்தக் காலக்கட்டத்தில்தான் புரிந்துகொண்டேன். நாங்கள் எங்கிருந்தாலும் எங்களின் உணர்வுகளை எவராலும் முனை மழுங்கச் செய்யமுடியாது.
தோழர்களே, ஏதோ கருணாநிதியால்தான் அழிவே ஏற்பட்டுவிட்டது என்பதைப் போன்ற தோற்றத்தை தமிழ்நாட்டில் சிலர் உலகத் தமிழர்களிடையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் முதலமைச்சராக திருமாவளவன் இருந்தால்கூட அல்லது நெடுமாறன் அவர்களே இருந்தால்கூட போரை நிறுத்த முடியாது. அதுதான் எதார்த்தமான உண்மை. இந்தப் போர் சிங்களவன் நடத்திய போர் அல்ல; உலக நாடுகள் நடத்திய போர்! இஸ்ரேலின் விமானங்கள் எதற்காக அங்கே போயின? பாகிஸ்தான் சார்பில் இராணுவப் பயிற்சி எதற்காகக் கொடுக்கப்பட்டது? இந்தியா மட்டுமா உதவி செய்தது? உலக நாடுகளின் ஆதரவையல்லவா அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
செப்டம்பர் 11க்குப் பிறகு, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட பிறகு, அமெரிக்கா தன்னை தற்காத்துக் கொள்வதற்காக உலக நாடுகளையெல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்டான். பயங்கரவாத இயக்கங்களைப் பட்டியல்படுத்தினான். அதில் ‘அல்கொய்தா’ இயக்கம் இடம் பெற்றது. ஆனால், அந்தப் பட்டியலில் எப்படி விடுதலைப் புலிகள் இயக்கம் இடம் பெற்றது? அல்கொய்தா இயக்கமும், விடுதலைப்புலிகள் இயக்கமும் ஒன்றா? அல்கொய்தா இயக்கம் ஒரு விடுதலை இயக்கமா? அல்கொய்தா இயக்கம் வெகுமக்கள் இயக்கமா? அல்கொய்தா இயக்கம் ஒரு தேசிய இனக் கருத்தியலை ஏற்றுக்கொண்ட இயக்கமா? அல்கொய்தா இயக்கத்தின் நடவடிக்கைகள் முற்றிலும் வேறானவை. அது பழிவாங்குவதற்கு உருவான ஒரு ஆயுதக் குழு. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கான ஒரு ஆயுதக்குழு.
தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு வெகுமக்கள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம். ஆனால், புலிகளை அந்தப் பட்டியலில் சேர்த்து விட்டார்கள். அதனால்தான் உலகநாடுகளில் எங்கே தமிழன் போனாலும் அவனுக்கு இடையூறாக அமைந்தது, பொருளாதாரத்தடை, அரசியல் தடை என்று விடுதலைப் புலிகளுக்கு மிகப்பெரிய நெருக்குதலை உருவாக்கியது. இது எப்போது நிகழ்ந்தது? இராஜபக்சே காலத்திலா? இல்லை.
இந்தப் பயணத்தில் இரணில் விக்கிரம சிங்கேவைப் பார்த்தபோது ஒன்றைச்சொன்னேன், நீங்கள் விதைத்தீர்கள்; இராஜபக்சே அறுவடை செய்கிறார் என்று சொன்னேன். அதனுடைய பொருளைப் புரிந்துக்கொண்ட இரணில் விக்கிரமசிங்கே என்னை ஆழமாகப் பார்த்தார். இரணில் விக்கிரமசிங்கேவை பிரபாகரன் ஆதரிக்காதது ஒரு குற்றம் என்று பலர் பேசிக் கொள்கிறார்கள். நம்முடைய முதல்வரே பேசுகிறார். இரணில் விக்கிரசிங்கே என்கிற நரி செய்த சூழ்ச்சி, சூது, சதிதான் இன்றைக்கு இராஜபக்சே அறுவடை செய்வதற்கு வசதியாகப் போய்விட்டது. வெளியிலிருந்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். திருமணம் செய்யாத என்னைப் போன்றவர்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடாது. கணவன் மனைவி இப்படி இருந்திருக்கலாம்; கணவன் இப்படி பொறுத்துப் போயிருக்கலாம், மனைவி இப்படி விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம் என்று நான் விமர்சித்தால் எனக்கு அந்தத் தகுதியில்லை.
அதைப்போல விடுதலைப்போராட்டத்தை நடத்துகிறவர்களைப் பற்றி தேர்தல் அரசியல்வாதிகள் விமர்சிக்கக்கூடாது. அந்தத் தகுதி எனக்கே கிடையாது. விடுதலை யுத்தம் நடத்துகின்றவர்களுக்குத்தான் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன என்பது தெரியும். இதை பொதுவான முறையில் நான் ஒரு விடையாகச் சொல்லுகிறேன்.
இயக்கத்திற்குள்ளேயே, ஒரு நீதிமன்றம், விசாரணை, தண்டனை! மாத்தையா அப்படித்தான் விசாரிக்கப்பட்டார். ஏனோ தானோ என்று மாத்தையாவை தண்டித்துவிடவில்லை. ஒரு விடுதலை இயக்க அரசியலில் அல்லது ஒரு படை நடத்துகின்ற அரசியலில் இவையெல்லாம் தவிர்க்கமுடியாது. இந்திய உளவுத்துறையான ‘ரா’ தலையிட்டு போராளிக் குழுக்களை தூண்டிவிட்டு, விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான முயற்சியில் இறங்கியபோது தம்மை தற்காத்துக்கொள்கிற வகையில் புலிகள் செயல்பட வேண்டியிருந்தது.
ஒரு விடுதலை யுத்தத்திலே ஒரு கொள்கைக்காக, ஒரு குறிக்கோளுக்காக ஆயுதம் ஏந்தி மக்களைத் திரட்டிப் போராடுகின்றபோது தன்னுடைய உயிருக்குக் குறிவைக்கப்படுகிற நிலையில், தன்னைத் தற்காத்துக் கொள்ளாமல் வேறு என்ன செய்யமுடியும்? அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. நம்மால் விமர்சிக்கமுடியாது.
24 மணி நேரத்தில் தூங்குகின்ற நேரம் தவிர மற்ற நேரத்தை நாம் பொழுதுபோக்குகளுக்காக கழித்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பான்மை நேரத்தை நாம் வெட்டிப் பேச்சுகளுக்காகவும், வீண்பொழுது போக்குகளுக்காகவும் கழித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், ஒரு விடுதலை யுத்தத்தைப்பற்றி விமர்சிக்கத் துளி அளவும் என்னைப் போன்றவர்களுக்குத் தகுதியில்லையென்றுதான் நான் உணர்கிறேன்.
உலகநாடுகளின் தலையீடு, இந்திய அரசின் தலையீடு. இந்திய அரசின் பிராந்திய நலன், போன்ற இவற்றுக்கிடையிலேதான் இலங்கைத் தீவும், ஈழத் தமிழர்ச் சிக்கலும் மாட்டிக்கொண்டது. இந்நிலையில் இந்திய அரசே முயற்சித்திருந்தாலும்கூட அந்தப் போரை நிறுத்தியிருக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்!
இப்படி நான் பேசுவதனால், இந்திய அரசுக்கோ அல்லது தமிழக முதல்வருக்கோ ‘வக்காலத்து’ வாங்குவதாகச் சிலர் விமர்சிப்பார்கள். நம்முடைய பார்வையில், விரிந்த விசாலமான ஒரு அணுகுமுறை தேவை. உலகச் சூழல்களையெல்லாம் கருத்தில்கொண்டு தான் அடுத்தக்கட்ட நகர்வைநோக்கி நாம் போக முடியும். 25ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தில், உலக அரங்கில் எந்த நாடு தமிழீழத்தை அங்கீரித்திருக்கிறது? ஏன் அது நடைபெறவில்லை? இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்தைச் சார்ந்தவனும் இதைப் பற்றி மனிதாபிமான அடிப்படையில் கூட பேசவில்லையே ஏன்? மனித உரிமைகள் அங்கே நசுக்கப்படுகின்றன என்கிற அடிப்படையில்கூட ஆந்திராவிலே, கேரளாவிலே, கருநாடாகாவிலே ஒரு போராட்டமும் நடக்க வில்லையே? யாரும் ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லையே ஏன்?
தமிழ்நாட்டில் நான் ஏற்கனவே சொன்னதைப் போல, காங்கிரசு ஈழத்திற்கும் எதிரானது; புலிகளுக்கும் எதிரானது! கம்யூனிஸ்ட்டுகளும் அப்படித்தான். ஈழத்திற்கும் புலிகளுக்கும் எதிரானவர்கள். எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக இந்திரா காந்தி காலத்தில் ஆதரித்தது. இந்திராவும் ஆதரித்தார், எம்.ஜி.ஆரும் ஆதரித்தார். அப்போது இந்திய அரசு எதிராக இருந்திருந்தால் எம்.ஜி.ஆர். எப்படி இருந்திருப்பார் என்று சொல்லமுடியாது. அன்று இந்திய அரசும் ஆதரித்தது; அதனால், எம்.ஜி.ஆரும் ஆதரித்தார்! எம்.ஜி.ஆர். அள்ளிக் கொடுத்தார் என்று எல்லோரும் பெருமையாகச் சொல்லுகிறோம், இந்திய அரசு சொல்லித்தான் அள்ளிக்கொடுத்தார். இந்திய அரசுக்குத் தெரிந்து தான் நான்கு கோடி ரூபாய் கொடுத்தார், கணக்கில் வராமல் சில கோடிகள் கொடுத்தார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
ஏனென்றால், அன்றைய சூழலில் இந்தியாவே ஆதரித்தது; ஜெயவர்த்தனாவை எதிர்ப்பதற்காக! ஆகவே, எம்.ஜி.ஆருக்கு அதில் சிக்கல் இல்லாமல் இருந்தது. எம்.ஜி.ஆருக்கு பிறகான அதிமுக என்றைக்காவது ஒரே ஒரு நாள் மறந்தாவது ஈழத்தை ஆதரித்ததுண்டா? விடுதலைப் புலிகளை ஆதரித்ததுண்டா? தமிழ்நாட்டில் மிகப் பெரிய கட்சிகளாக இருக்கின்ற இந்தக் கட்சிகள் அனைத்தும் ஈழத்திற்கும் புலிகளுக்கும் எதிராக இருக்கின்றன. ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறோம்; ஒருவேளை மலர்ந்தால் ஈழத்தை வரவேற்போம்! இதுதான் திமுக நிலைப்பாடு! புலிகளையும் ஈழத்தையும் சேர்த்து வெளிப்படையாக ஆதரிக்கின்ற அமைப்புகள் தமிழ்நாட்டில் மூன்றே மூன்றுதான், ஒன்று விடுதலைச் சிறுத்தைகள், இன்னொன்று ம.தி.மு.க, இன்னொன்று பா.ம.க., இவை மிகப்பெரிய பரவலான வாக்குவங்கியைக் கொண்ட கட்சிகள் அல்ல.
அதாவது, திமுக ஆதரவு இல்லை; அதிமுக ஆதரவு இல்லை; காங்கிரசு ஆதரவு இல்லை; இடதுசாரிகள் ஆதரவு இல்லை! தமிழீழத்திற்கான ஆதரவை 25 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலேயே நம்மால் வென்றெடுக்க முடியவில்லையே. இது எவ்வளவு பெரிய ஒரு பின்னடைவு என்பதைத் தயவுகூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும். இது ஒரு விடுதலை இயக்கம்; இது ஒரு மக்கள் இயக்கம் என்கிற கருத்தியலை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்ல முடியாமல் ஏற்பட்ட ஒரு தோல்வி.
இந்த நிலையில்தான் ‘பொடா’ இருந்த காலத்திலும் சரி, அதற்குப் பின்னரும் சரி, இன்றைய நிலையிலும் சரி, விடுதலைச் சிறுத்தைகள் துணிந்து விடுதலைப்புலிகளின் கருத்தியலை மக்களிடத்தில் பரப்பிவருகிறோம். தேர்தல் அரசியலில் தவிர்க்க முடியாத நிலையில் தனி அணி கட்டுவோம் என்கிற முயற்சியை நாம் மேற்கொண்டோம். திமுக வேண்டாம்; அதிமுக வேண்டாம்; தனி அணி கட்டுவோம்! பா.ம.க. தலைமையில் ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் ஒன்று சேர்வோம். நெடுமாறன் போன்றவர்கள் வெளியில் இருந்து ஆதரிக்கட்டும். வடமாவட்டங்களிலாவது ஐந்து ஆறு தொகுதிகளைக் கைப்பற்றுவோம் அதுபோதும். ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் சென்றால் கட்டாயமாக நம்மால் அதை ஒரு தேசியப் பிரச்சனையாகக் கொண்டு வரமுடியும், ஆகவே, தனி அணி கட்டுவோம் என்று சொன்னேன். அந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கிடைத்ததா?
தொடக்கத்திலிருந்து திருமாவளவனை அதிமுக அணிக்குக் கொண்டுபோகவேண்டும் என்பதில்தான் முனைப்பாக இருந்தார்களே தவிர மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்கிற முயற்சி நடந்ததா? அது தோற்றுப்போன நிலையில்தான், தனித்துப்போட்டியிடுவது என்று விடுதலைச்சிறுத்தைகள் முடிவு செய்தோம்.
தனித்துப் போட்டியிடுவது என்கிற நிலைப்பாட்டை அறிவிக்கப்போகின்ற நிலையில்தான், ‘99இல் நம்மை தோற்கடித்தார்கள். 2004லிலும் நம்மை தோற்கடித்தார்கள். தமிழீழ ஆதரவாளர்கள்கூட இதே தொகுதியில் பொன்னுச்சாமிக்கு ஓட்டுக்கேட்டார்களே தவிர திருமாவளவனுக்கு ஓட்டுக்கேட்கவில்லை! இந்தத் திருமாவளவனை இந்தத் தொகுதியில் நாம் ஆதரிப்போம் என்று எந்தத் தமிழ்த்தேசியவாதியும் ஆதரிக்கவில்லை. நெய்வேலிக்கு வந்து பொன்னுச்சாமிக்கு ஓட்டுக்கேட்டார்கள், சிதம்பரம் வந்து பொன்னுச்சாமிக்கு ஓட்டுக்கேட்டார்கள் அது எந்த அடிப்படையில்? ஆக, எப்படிப்பட்ட உணர்வாளர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்றைக்கு வடிகட்டிய தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் இந்த அவையில் கூடியிருக்கிறோம். உண்மையான தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் என்கிற அந்த நம்பிக்கையோடு நான் இதைப் பிரகடனப்படுத்துகிறேன். ஆமாம், இந்த நிலையில் தனித்துப் போட்டி என்று திருமாவளவன் அறிவிக்க எத்தனித்தான். என்னையும் தாண்டி கட்சி என்று ஒன்று இருக்கிறது. என்னைத் தாண்டி கட்சி இயங்க வேண்டிய தேவையிருக்கிறது. என் தலைமுறையைத் தாண்டி இந்த இயக்கம் ஒடுக்கப்பட்டவர்களை அரசியல் சக்தியாக அணிதிரட்ட வேண்டிய தேவையிருக்கிறது. ஆகவே, 1999ல் தோற்றுப்போனோம், 2004இல் தோற்றுப் போனோம், 2009லிலும் தோற்கடிக்கப்படுவோம் தனித்து நின்றால்! 99லே இரண்டேகால் இலட்சம் ஓட்டு, 2004இலே இரண்டரை இலட்சம் ஓட்டு, 2009இலே கூடுதலாக ஒரு 5,000 அல்லது 10,000 ஓட்டு விழலாம், வெற்றிபெற முடியாது. ஆகவே, ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்திருக்கவேண்டும், அதுதான் முக்கியமானது என்று கட்சி சொன்னது.
இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் எங்கள் அணியில்தான் இருக்கிறார்கள் என்று அன்றைய காலையில் திமுக தலைவர், தமிழக முதல்வர் செய்தியாளர்களிடத்திலே சொன்னார். அந்தச் சூழலில்தான் மீண்டும் அந்தக் கூட்டணியில் இடம் பெற்று விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலில் பங்கேற்றது. இது ஒரு பெரிய குற்றச்செயலா?
உலக நாடுகளில் இருக்கின்ற உலகத் தமிழர்களிடையே இன்றைக்கு விடுதலைச்சிறுத்தைகள் பற்றியும் திருமாவளவனைப் பற்றியும் எவ்வளவு கேவலமாக அவதூறுகளைப் பரப்பமுடியுமோ அவ்வளவு கேவலமாக அவதூறுகளைப் பரப்பியிருக்கிறார்கள்.
தேர்தலுக்காக ஒரே ஒரு நாள் உண்ணாவிரத நாடகம் நடத்திய ஜெயலலிதாவை நம்புகிறவர்கள் 25 ஆண்டு காலமாக இந்தக் களத்தில் நின்று முழுமூச்சாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற திருமாவளவன் மீது அவதூறு முத்திரைகளைக் குத்துகின்றனர். நாம் கவலைப்படவில்லை.
இந்த அணியிலே இருந்து 10பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் செல்லுகிறது என்கிற அறிவிப்பு வந்தபோது, உண்மையில் நம்மை அதில் அனுமதிக்கமாட்டார்கள் என்றுதான் கருதினேன். நான் சிதம்பரம் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் இருந்தபோது தொலைப்பேசி அழைப்பு வந்ததாக தோழர்கள் சொன்னார்கள். நான் முதல்வரைத் தொடர்புகொண்டு பேசியபோது சொன்னார், “நாடாளுமன்றக் குழு இலங்கை செல்கிறது, அதில் நீங்களும் ஒருவர், போய்வாருங்கள்” என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, அதே நேரத்தில் ஏதோ ஒரு துள்ளல் இருந்தது. ஏனென்றால், அந்தப் பகுதிக்குச் சென்று மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தால்தான் நாம் ஆறுதல் பெறமுடியும் என்கிற பதற்றமும் துடிப்பும், பதைப்பும் எனக்குள் அப்போது இருந்தது. எனவே, இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது என்று ஏற்றுக்கொண்டேன். கட்சியின் முன்னணித் தோழர்கள் சொன்னார்கள், “மற்றவர்களை அரசு பாதுகாக்கும் உங்களை அரசே, அது இலங்கை அரசாகவும் இருக்கலாம் அல்லது இந்திய அரசாகவும் இருக்கலாம். இவன் ஒருவன்தான் துள்ளிக் கொண்டிருக்கிறான், அவனை அங்கேயே போட்டுத் தள்ளிவிடுங்கள்” என்று சொல்லுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏதோ ஒரு தமிழ்க் குழு செய்து விட்டது என்று பழிபோடவும் வாய்ப்பிருக்கிறது.
அப்படிப் போட்டுத்தள்ளிய பிறகு ஒரு நாளில் இரண்டுநாளில் தோழர்கள் அடங்கிப்போய்விடுவார்கள். ஆகவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். என்ன நடந்துவிடும்? போய் விட்டுவருவோம் என்கிற நம்பிக்கையோடு புறப்பட்டுப் போனேன். இப்படியெல்லாம் ஆவணப்படம் எடுக்கவேண்டும்; வெளியிடவேண்டும் என்றெல்லாம் எந்த எண்ணமும் கிடையாது. முன் திட்டம் கிடையாது. போகின்ற நேரத்திலே ஆர்வலன் ஒரு வீடியோ கேமராவையும், ஸ்டில் கேமராவையும் கொடுத்தனுப்பினார். அங்கே படம் பிடிப்பதற்குச் சற்றுத் தயக்கம் இருந்தது. முதல் சந்திப்பிலேயே அந்த எதிர்ப்பும் வந்தது. படம் எடுக்கக் கூடாது என்று இந்தியத் தூதரக அதிகாரியும் சொன்னார், நான் மீறி எடுத்தேன். அதனால்தான் சரியான வெளிச்சம் இல்லை, சரியான அளவிலே குரல் பதிவு இல்லை. ஏதோ பதிவு செய்தாக வேண்டும் என்கிற அந்தத் துடிப்போடு பதிவு செய்தேன். போதிய அளவிலே அதிலே மின்சார சேமிப்பும் இல்லை. அதனால் முஸ்லீம் காங்கிரசுத் தலைவர்களின் சந்திப்பைப் பதிவு செய்ய முடியாமல்போய் விட்டது. ஓரளவு நான் பதிவுசெய்தேன். கிட்டத்தட்ட நான் சொல்லுவதை போலவே குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இயங்கினார். அதை வந்து முதல்வர் அவர்களிடத்திலேயும் சொன்னார். “என்னைத்தான் குழுத் தலைவராக நீங்கள் அனுப்பினீர்கள் ஆனால், எனக்குத் தலைமை தாங்கியதே திருமாவளவன்தான்” என்று சொன்னார்.
ஏனென்றால், நான்தான் சொன்னேன், இராமநாதபுரம் முகாம் போக வேண்டும், ‘ஜோன் - 4’ என்கிற முகாமிற்கு போகவேண்டும், யாழ்ப்பாணத்தில் நமக்கு நேரம் அதிகமாகத் தேவையில்லை, டக்ளஸ் தேவானந்தாவினுடைய உணவும் நமக்குத் தேவையில்லை. உடனே நாம் கிளம்ப வேண்டும் என்றெல்லாம் சொன்னேன். அதன்படி டி.ஆர்.பாலு குழுவை இயக்கினார்.
வவுனியாவில் வதைமுகாம்களைப் பார்வையிட்டோம். மக்கள்படும் அல்லல்களைக் கண்டோம். வேதனை சுமந்தபடி கொழும்பு திரும்பினோம். மலையகத்திற்குச் சென்றோம். அடுத்தநாள், இராஜபக்சே போன்றவர்களைச் சந்தித்தோம். இராஜபச்சேவை எப்படி சந்திக்கலாம்? அவரோடு எப்படி கை குலுக்கலாம்? அவர் என்னவோ பார்சல் கொடுத்தாராமே திருமாவளவன் என்ன பார்சல் வாங்கிக் கொண்டு வந்தார்? ராஜபக்சேவிடமிருந்து பணம் வாங்கி விட்டாராமே திருமாவளவன் பௌத்தத்தைப் பரப்புவதற்காக! இப்படி எவ்வளவு கீழ்த்தரமான கேவலமான விமர்சனங்கள்! எப்படி இந்த இனம் மீட்சிபெறும்?
இனம் அழிகிறது என்பதைவிட தனக்கு வேண்டாத ஒருவன் வெளிச்சக் கீற்றில் நிற்கிறான் என்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நம் இனம் அங்கே அழிந்து கொண்டிருக்கிறதே அதைப்பற்றி திருமாளவன் என்ன சொல்கிறான் என்று யாரும் கேட்கவில்லை. பயணத்தின்போது எனக்குள் நான் ஓர் உறுதி எடுத்திருந்தேன். யார் வீட்டிலும் தேநீர் குடிக்கக்கூடாது; பார்த்துவிட்டு மட்டும் வருவது என்று! ஆனால், உண்மையைச் சொல்லுகிறேன், நான் மட்டுமல்ல; மற்ற யாருமே தேநீர் குடிக்கவில்லை. இங்கே இருக்கின்ற முட்டாள்கள், ‘அவர்கள் விருந்து சாப்பிட்டார்கள்’ என்று சொல்லுகிறார்கள்.
பசில் இராஜபக்சேவை சந்தித்தபோது மட்டும்தான் அவர் வெளியே வந்து “ஏன் தேநீர் அருந்தாமல் செல்லுகிறீர்கள்?” என்று பிடித்து இழுத்து ‘நானும் சாப்பிடுகிறேன், நீங்களும் சாப்பிடுங்கள்’ என்று கட்டாயப்படுத்தி தேநீர் கொடுத்தார். அப்போதுகூட நானும் சிலரும் நழுவிக் கொண்டோம்.
மற்றபடி, இராஜபக்சே கொடுத்த தேநீரையோ அல்லது கோத்தப்பய இராஜபக்சே கொடுத்த தேநீரையோ அல்லது வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் ரோகித் கொடுத்த தேநீரையோ யாரும் அருந்தவில்லை. எந்த இடத்திலும் சாப்பிடவில்லை. தொண்டமான்தான் உணவு கொடுத்தார். அவருடைய இல்லத்தில்! உணவு விடுதியில் டக்ளஸ் தேவானந்தா உணவையும்கூடத் தவிர்த்தாகிவிட்டது.
அடுத்து, யாருக்கும் பார்சல் எதுவும் இராஜபக்சே தரவேயில்லை. கலைஞர் எழுதிய புத்தகங்களின் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களை கனிமொழி இராஜபக்சேவிடம் கொடுத்தார். அதைப்போன்ற ஒரு புத்தகப் பரிசை அவர் இவருக்குக் கொடுத்தார். வேறு யாருக்கும் எந்தப் பரிசும் வழங்கப்படவில்லை. வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித் மட்டும் ஒரு நீளமான ஒரு பார்சல் எல்லோரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தார். ஒதுங்கி ஒதுங்கி நின்றாலும் பிடித்துப்பிடித்துக் கொடுத்தார். அது தேநீர்த்தூள் பொட்டலங்கள்!
அவையிலே அநாகரிகமாக நடந்துகொள்ளக் கூடாது, நமக்கு மாற்றுக் கருத்தைச் சொன்னால்கூட பொறுத்துக் கொண்டு சகித்துக்கொண்டு இருப்பதுதான் ‘அவை நாகரிகம்’!. சொல்லி முடித்த பிறகு விளக்கம் சொல்லுவதுதான் ‘அவை நாகரிகம்’! ஓர் அவையில், எதிரிகளைப் பார்த்தால்கூட அப்போது புன்னகைப்பதும், கை குலுக்குவதும் ‘அவை நாகரிகம்’! அதுதான் மனித நாகரிகம்! எதிரியை பார்க்கின்ற இடத்திலேயே அரிவாளால் வெட்டி விட, குத்திவிட முடியாது அது ரவுடித்தனம்! அது எப்படி முதிர்ச்சியடைந்த ஒரு அணுகுமுறையாக இருக்கமுடியும்? எதிரிகளிடத்திலும் துரோகிகளிடத்திலும் எம் இனம் சிக்கிக்கிடக்கின்றபோது எதிரிகளைச் சந்திக்காமல் துரோகிகளைச் சந்திக்காமல் எம்மக்களை எப்படிச் சந்திப்பது? எனக்குப் பிடிக்காத ஒரு சாதி வெறியன் சிறைக் காப்பாளராக இருக்கிறான் என்றால் அவனைப் பார்க்காமல் எப்படிச் சிறையில் இருக்கின்ற என் தம்பியைப் பார்க்க முடியும்? சிறைக் காப்பாளராக இருக்கின்ற சிறை கண்காணிப்பாளரும் ஒரு சாதி வெறியனாக இருக்கலாம்!
சிறை கண்காணிப்பாளர் விடுதலைச்சிறுத்தைகளுக்கு எதிரானவனாக இருக்கலாம். சிறை கண்காணிப்பாளன் சேரியை கொளுத்துகிறவனாகக்கூட இருக்கலாம். ஆனால், அவன் சிறைக் கண்காணிப்பாளர் என்கிற இடத்திலே இருக்கிறான். அவனிடம் நான் மனு எழுதிக்கொடுத்து, அவன் அனுமதியைப் பெற்று அவனிடத்திலே பேசிவிட்டுத்தான் என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளை சிறைச்சாலையில் போய்ப் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கின்ற போது, “நீ எப்படி கண்காணிப்பாளர் கையை குலுக்கிவிட்டு என்னைப் பார்க்கிறாய், நான் பார்க்கமுடியாது” என்றா என் தம்பி சொல்ல முடியும்? நிர்வாகக் கட்டமைப்பு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அந்தக் கட்டமைப்பிற்குள்ளே நுழைகின்றபோது அதையெல்லாம் சந்தித்து விட்டுத்தானே நாம் சந்திக்க வேண்டியவர்களைச் சந்திக்கமுடியும்.
இராஜபக்சேவை சந்தித்ததினால் என்னுடைய 25 ஆண்டுகால ஈழ ஆதரவு உணர்வு கற்பிழந்து போய் விட்டதாம். எவ்வளவுபெரிய வெட்கக்கேடான விமர்சனங்கள். அதற்காக, “நான் புலி ஆதரவாளர், டேய் இராஜபக்சே, எப்படிடா நீ எம் மக்களை கொன்றாய்!” என்றா பேசமுடியும்? ஓர் அவையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற ‘அவை நாகரிகத்தை’ நான் கடைபிடிக்காமல் இருக்க முடியுமா?
அண்மையில், இலண்டனில் நான் பேசிக் கொண்டு இருந்தேன். நான் பேசி முடித்தபிறகு அங்கே இருந்த மக்கள் எல்லாம் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். திருமாவளவன் பேச்சில் நியாயம் இருக்கிறது என்று எழுந்துநின்று கைத்தட்டினார்கள். அயல் நாடுகளில், ஐரோப்பிய நாடுகளில் நினைத்த நேரமெல்லாம் கைத்தட்டமாட்டார்கள். ஐரோப்பிய நாடுகளில் கைத்தட்டுகிறார்கள் என்றால், அதிலும் எழுந்துநின்று கைத்தட்டுகிறார்கள் என்றால், “பேசிய பேச்சில் நூற்றுக்கு நூறு எங்களுக்கு உடன்பாடு இருக்கிறது; வாழ்த்துகிறோம்” என்று உணர்த்தவே எழுந்து நின்று கைத்தட்டுவார்கள். இது ஆங்கிலேயே நாகரிகம்! அன்று இலண்டனில் திருமாவளவன் பேசி முடித்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்துநின்று கைத்தட்டியது. அந்தக் கைத் தட்டல் அடங்குவதற்குச் சில நிமிடங்கள் ஆயின.
அதன்பிறகு தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த நம்முடைய எழுத்தாளர் தமிழுருவி மணியன் பேசினார், “திருமாவளவன் செய்தது தவறு, திருமாவளவன் செய்தது தவறு” என்று பேசினார்! ஒட்டுமொத்த அரங்கமே என் பேச்சுக்குப் பிறகு நியாயத்தை புரிந்துகொண்டுவிட்ட நிலையில், அதன்பிறகு அவர் அப்படிப் பேசினார். மேலும், கருணாநிதி நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்றார்.
கருணாநிதி என்ன இலங்கை அதிபரா? அல்லது அமெரிக்க அதிபர் ஒபாமாவா? அந்த இரண்டு பேரால்தான் அன்று போரை நிறுத்தமுடியும். ஒன்று இராஜபக்சே நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் அல்லது ஒபாமா எச்சரித்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம். சோனியாகாந்தி சொல்லியிருந்தால் கூட போரை நிறுத்தியிருக்க முடியாது. சோனியா காந்திக்கே அந்த வலிமை இல்லை என்கிறபோது, ஒரு முதலமைச்சருக்கு ஏது வலிமை? எங்கிருந்து வரும்?
இந்நிலையில், கருணாநிதி நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்று உலகத் தமிழர்களை திசைதிருப்புவது சரியா? கலைஞர் என்ன செய்திருக்கலாம் என்றால், காங்கிரசு கூட்டணியை விட்டு வெளியே வந்திருக்கலாம். காங்கிரசுக் கூட்டணியை விட்டு வெளியே வந்திருந்தால் ஆட்சி போயிருக்கும். ஆட்சி போயிருந்தால், அம்மா மற்றவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு புதிய ஆட்சியை உருவாக்கியிருப்பார். இதுதான் நடந்திருக்கும்.
கருணாநிதி நினைத்திருந்தால் போரை நிறுத்தலாம் என்றும், திருமாவளவன் செய்தது தவறு என்றும் அந்த அவையிலே அவர் பேசுகிறார். நான் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். அவை நாகரிகம் கருதி! வேறு எவனாவது இருந்திருந்தால், ‘ஏய் பேச்சை நிறுத்துய்யா!’ என்று சொல்லியிருப்பான்! திருமாவளவனாக இருந்த காரணத்தினால் அவர் பேசி முடிக்கின்ற வகையில் அமைதியாக இருந்து கையை குலுக்கி, அண்ணா நீங்கள் மிகச் சிறப்பாக பேசினீர்கள், நன்றி என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன். இந்த நிமிடம் வரையில் என் வருத்தத்தை அவரிடத்திலே நான் வெளிப்படுத்தவில்லை.
புலம்பெயர்ந்த மக்களிடையே திருமாவளவன் மீது இருக்கின்ற நன்மதிப்பைச் சீர்குலைப்பதிலே அவருக்கு என்ன இலாபம்? கருணாநிதி நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று ஏன் பொய் சொல்லவேண்டும்? உலகச் சூழலைப் புரிந்தவர்களால் சர்வதேச அரசியலை புரிந்துகொள்கிறவர்களால் இதை ஒப்புக்கொள்ளமுடியும். காங்கிரசை விட்டு நான் வெளியே வருகிறேன் என்று கலைஞர் சொல்லிவிட்டு வெளியே வந்திருக்கலாம். வெளியே வந்திருந்தால் அவரது ஆட்சி கவிழ்ந்திருக்கும்.
திமுக அரசு இங்கே இல்லாமல் போயிருக்கும். அப்போது தேர்தல் வந்திருக்காது. பா.ம.க. தயாராக இருந்தது. காங்கிரசு தயாராகயிருந்தது, ம.தி.மு.க. தயாராகயிருந்தது, கம்யூனிஸ்ட்டுகள் தயாராக இருந்தார்கள், அவர்கள் சேர்ந்து ஒரு ஆட்சியை உருவாக்குவதற்குத் தயாராக இருந்தார்கள். அவர்களுக்கு ஈழத் தமிழர்களைவிட கருணாநிதி ஆட்சியை அகற்றிவிட்டு இங்கே வேறொரு ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்தார்களே தவிர வேறு காரணம் இல்லை. அதைத் தடுக்கின்ற முயற்சியில் தான் கலைஞர் குறியாக இருந்தார். அதற்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை. என்னிடம் இருப்பது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர். எங்கள் தயவால் அவர் ஆட்சி நடத்தவேண்டும் என்பது இல்லை. இரண்டுபேர் இருந்தார்கள், ஒரு ஆள் போய்விட்டார். அதனால் என்னிடம் இருப்பது ஒருவர்தான். அந்த ஒரு உறுப்பினருடைய ஆதரவு அவருக்கு தேவையே கிடையாது.
காங்கிரசு 35 சட்டமன்ற உறுப்பினர்கள்! அந்த ஆதரவை வைத்துக்கொண்டு அவர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தங்கபாலு முயற்சித்தார்! கடப்பாரையை போட்டு முக்கி முக்கிப் பார்த்தார்; இளங்கோவன் நெட்டி நெட்டிப் பார்த்தார்; அந்தக் குழுக்கள் எல்லாம் திருமாவளவனை ஒரு கல்லாக வைத்துக்கொண்டு கூட்டணிக் கண்ணாடியை உடைக்கப் பார்த்தார்கள். இரண்டுபேருக்கும் இடையிலே. நம்மை பயன்படுத்தப் பார்த்தார்கள். “கூட்டணியில் ஏன் இவனை வைத்திருக்கிறாய்? இவன் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன். இவனை கூட்டணியைவிட்டு நீக்கு!” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். எங்களுக்கு எல்லாம் ஒன்றுதான். நாடாளுமன்றத்தில்தான் குரல் கொடுக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லை, மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து எங்களால் குரல்கொடுக்க முடியும், போராடமுடியும். இந்தத் தேர்தலில்தான் வெற்றிபெற வேண்டும் என்பதில்லை, திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதில்லை இந்தத் தேர்தல் இல்லாவிட்டாலும் மக்களிடத்திலே நாங்கள் தொடர்ந்து நிற்போம்.
இலண்டனில் அந்த அரங்கத்தில் அவர் சொன்னார், திரும்பத் திரும்பச் சொன்னார், ‘திருமாவளவன் தவறு செய்துவிட்டார்; கருணாநிதி நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும்’ என்று.
அந்த இடத்தில் எப்படி நான் அமைதி காத்தேனோ அந்த அவை நாகரிகத்தைத்தான் இராஜபக்சே இருந்த அவையிலும் நான் கடைப்பிடித்தேன். என் அடிவயிறு எரிந்தது! என் உள்ளம் கொதித்தது! என் உடல் எல்லாம் தீயாகப் பரவியது! இராஜபக்சேவைப் பார்க்கின்ற நேரத்தில் நான் அவ்வளவு பதற்றம் அடைந்தேன். ஆனால், அவை நாகரிகம் கருதி எல்லோருடன் சேர்ந்து நான் சிரிக்கவேண்டியிருந்தது; எல்லோரையும் போல் சேர்ந்து நான் கைக்குலுக்க வேண்டி இருந்தது. இராஜபக்சேவைப் பார்க்காமல் நான் விடுதியிலே தங்கி விடலாம் என்றுகூடக் கருதினேன், அது ஏதாவது ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். நான் தங்கியிருந்த ஐந்தாவது மாடியிலே சிங்கள உளவாளிகளை நிற்க வைத்திருந்தார்கள். என்னை இரவு நேரங்களில் யார் வந்து பார்க்கிறார்கள்; என்பதைக் கண்காணிப்பதற்காகவோ அல்லது என்னைப் பாதுகாப்பதற்காகவோ எனக்குத் தெரியாது.
இந்த நிலையில், ஏன் வீண் சந்தேகங்களை எழுப்புவதற்கு நாம் அனுமதிக்கவேண்டும் என்கிற காரணத்தினால் அவர்களோடு பத்தோடு பதினொன்றாக சேர்ந்துபோனேன். இராஜபக்சே என்னைப் பார்த்ததும் இரண்டு புருவங்களை உயர்த்தி வா என்று அழைப்பதுபோல் அசைத்தார். என்னை அடையாளம் கண்டுகொண்டதாக நான் நினைத்துக்கொண்டேன். ஏனென்றால், 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முக்கால்மணி நேரம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சந்தித்துப் பேசியது எனக்கு நினைவிருக்கிறது;
அடுத்து, இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்; எதிர்த்துப் போராடுகிறார்கள், நான் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று! இப்படி சொல்லவந்த இராஜபக்சே இடையிலே என்னைப் பார்த்து திருமாவளவன் தமிழ்நாட்டில் போராடுவதைப்போல என்று சொன்னார்! அவரை எதிர்த்து நான் போராடுகிறேன் என்பதை இங்கே இருக்கின்ற தமிழ்த்தேசியவாதிகள் புரிந்துகொள்ளவில்லை; இராஜபக்சே புரிந்துக் கொண்டிருக்கிறார். பேசி முடித்தபிறகு யாரும் எதிர்பார்க்கவில்லை, ஜே.எம்.ஆருண் சென்று ஒரு பொன்னாடையைப் போர்த்திவிட்டார். டி.ஆர்.பாலு போர்த்தியிருந்தால் குழுவே போர்த்தியது என்று பொருள்! டி.ஆர்.பாலு யாருக்குமே பொன்னாடை போர்த்தவில்லை. தனியே என்னுடன் வருகின்றபோது அவர் வேதனைகளை என்னிடத்திலே வெளிப்படுத்தினார்; “இப்படியெல்லாம் இவர்களின் கைகளை நாம் குலுக்கவேண்டியிருக்கிறது பார்த்தாயா தம்பி!” என்று என்னிடத்திலே வேதனைப்பட்டார்.
இராஜபக்சேவுடன் எல்லாம் பேசி முடித்த பிறகு நான் அவர் அருகே சென்று சொன்னேன், ‘நீங்கள் ஒரு பௌத்தன்; இந்தத் தேசம் ஒரு பௌத்தத் தேசம்; உங்களிடம் அமைதியையும், கருணையையும்தான் உலகம் எதிர்ப்பார்க்கிறது! என்று சொன்னேன். அப்படியென்றால் என்ன பொருள்? “நீ இரத்தவெறி பிடித்தவனாக இருக்கிறாய், மாமிசவெறி பிடித்தவனாக இருக்கிறாய், இனப்படுகொலையை நடத்துகிறாய், நீ பௌத்தனா?” என்று நேரடியாகக் கேட்பதற்குப் பதிலாக, “நீ பௌத்தனாக இருக்கின்ற சூழலில், இந்தத் தேசம் ஒரு பௌத்ததேசம் என்று சொல்லப்படுகின்ற சூழலில் உங்களிடமிருந்து உலகம் அமைதியையும், அன்பையும் கருணையையும்தான் எதிர்பார்க்கிறது” என்று நான் சொன்னேன், அதற்கு அவர் சிரித்தார். நான் விருட்டென்று விடை பெற்று வாசல் நோக்கி வந்துகொண்டிருந்தேன்,
ஒரு புகைப்படக்காரர் ஓடிவந்து, “நில்லுங்கள் அதிபரோடு சேர்ந்து படம் எடுக்கவேண்டும்” என்று சொன்னார், நான் நின்றேன். வேகவேகமாக இராஜபக்சேவுடன் மற்றவர்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தார்கள். எல்லோரையும் நிறுத்தினார்கள். இராஜபக்சே பக்கத்தில் டி.ஆர். பாலு, டி.ஆர்.பாலுவுக்குப் பக்கத்தில் நான் நின்றேன். அந்தப்புரம் இராஜபக்சேவுக்குப் பக்கத்தில் கனிமொழி மற்றவர்கள் நின்றார்கள். அப்படி வரிசையாக நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். படபடவென்று எல்லோரும் படம் எடுத்தார்கள், ஏராளமான ஊடகவியலாளர்கள் இருந்தார்கள். களைந்து விடைபெற்றோம். திடீரென்று என் கையைப் பிடித்துக்கொண்டார் இராஜபக்சே! நான் எதிர்பார்க்கவே யில்லை. பக்கத்தில் இழுத்து டி.ஆர்.பாலுவிடம், “உங்களுக்குத் தெரியுமா? இவர் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவர்” என்று சொல்லிச் சிரித்தார். அவர்கள் அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை. மறுபடியும் என் வயிற்றைத் தடவிக் கொண்டே நல்லவேளை இவர் பிரபாகரனுடன் அப்போது இல்லை என்று சொல்லிச் சிரித்தார்; இதுதான் நடந்தது. அந்த இடத்திலே நான் “நீ எப்படிடா அப்படிச் சொல்லலாம்; பிரபாகரனுடன் இருந்திருந்தால் நீ என்னையும் வானுலகத்திற்கு அனுப்பியிருப்பாயா?” என்று சொல்லி நான் சண்டை போடவா முடியும்? அந்த இடத்தில் நான் என்ன நினைத்துக் கொண்டேன் என்றால், நான் பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கமானவன் என்பதை இராஜபக்சே தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறானே என்று!
அதாவது, இராஜபக்சேவுக்குத் தெரிகிறது, திருமாவளவன் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகத்தான் அந்தக்குழுவிலே இடம்பெற்றிருக்கிறான் என்பது! ஆனால், இங்கே உள்ளவன் நீ எப்படி அவனைப் பார்த்துச் சிரிக்கலாம்? அவன் சொன்னதை எப்படி கேட்டுக்கொண்டு வரலாம்? என்கின்றனர். நடந்ததை யெல்லாம் நான் வீடியோ படமாகக் கொண்டு வந்தேன். கொண்டுவந்ததை நாள் முழுக்கப் போட்டுப் பார்த்தேன். இதை ஆவணப் படமாக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குக் கிடையாது. அதில் நன்றாக இருந்த காட்சிகளையெல்லாம் எடுத்து வெட்டி, ஒட்டினோம். நான் ‘டென்மார்க்’ போகின்ற பயணத்திட்டம் ரத்தான பிறகுதான், 27ஆம் நாள் சென்னையில்தானே இருக்கப்போகிறோம், ஆகவே, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.
‘மனித அவலத்தின் சாட்சியம்’ என்று இப்படத்திற்கு இரண்டாவது தலைப்பிட்டிருக்கிறோம். அங்கே நடந்துகொண்டிருக்கின்ற கொடுமைகளை இன்றைக்கு ‘முள்வலி’ என்கிற தலைப்பில் ஜூனியர் விகடன் இதழில் எழுத்தாகவும், ‘வதக்குறாங்களய்யா’ என்கிற பெயரில் ஒரு ஆவணப்படமாகவும் நாம் பதிவு செய்திருக்கிறோம்.
‘வதக்குறாங்கய்யா’ என்று இல்லாமல் ‘வதக்குறாங் களய்யா’ என்று அவர் உச்சரித்திருக்கிறார். ‘வதக்குறாங் களய்யா’ என்கிற அந்த மொழியைத்தான் நான் தலைப்பாக எடுத்துக்கொண்டேன். பாரதி கிருஷ்ணகுமார் சொன்னதைப் போல இளைஞர்கள் பேச அஞ்சினார்கள், முதியவர்கள் மீறிப் பேசினார்கள், பெண்கள் மீறிப் பேசினார்கள். நான் தனியே சென்று படமெடுக்கவிடாமல் அந்த அதிகாரிகள் என் தோளைப்பிடித்துக்கொண்டு, கையைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே வந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அதையெல்லாம் மீறி எடுத்த சின்னச்சின்னத் துண்டுகள்தான் இப்போது ஆவணப்படமாக இணைக்கப் பட்டிருக்கிறது, தொகுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பெரியவர் ஒரே சொல்லை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார், ‘காப்பாத்துங்கய்யா, காப்பாத்துங்கய்யா’ என்று. வேறு எதையுமே அவர் சொல்லவில்லை. ஒரு பெரியவரைப் போய் நான் அணுகி நின்று பேச்சுக்கொடுத்துப் பார்த்தேன், ஒரு நிமிடம் அவரிடம் பேசுங்கள் என்று சொன்னேன். அவர் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்ததே தவிர பேச்சு வரவில்லை; கடைசிவரையில் அவர் பேசவில்லை. அதை நான் வீடியோ எடுக்க முடியாமல்போய் விட்டது. அதை ‘முள்வலி’யிலே பதிவு செய்திருக்கிறேன். அந்தப் பெரியவரின் கண்களை நான் துடைக்கிறேன். “அய்யா, சொல்லுங்கள், பேசுங்கள், ஏன் அழுகிறீர்கள்” என்றேன், எதுவுமே பேசவில்லை. எந்தளவுக்கு உணர்வுகள் அழுத்தப்பட்டிருந்தால் அவர் நாவிலிருந்து சொற்கள் வெளியே வரவில்லை; கண்ணீர்தான் உருண்டோடியது. ஜூ.வி. இதழில், ‘கண்ணீர் சொற்கள்’ என்று அதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். ‘அவர் கன்னத்தில் உருண்டோடிய கண்ணீர் சொற்கள் என்னைச் சுட்டன’ என்று நான் பதிவுச்செய்திருக்கிறேன்; சொற்கள் சுடும்! ஆகவே, கண்ணீர் சொற்கள் என்னைச் சுட்டன என்று அதிலே எழுதியிருக்கிறேன்.
ஓர் அம்மா! அவர் தானாக பேசிக்கொண்டேயிருப்பார், அதை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்; தானாக அந்தக் குரல் பதிவாகியிருக்கிறது; நான் அவரைப் பார்த்து பதிவு செய்யவில்லை; அவராக பேசிக் கொண்டிருப்பார். “எனக்கு அரிசி இல்லை, பருப்பு இல்லை, என் வீட்டுக்காரருக்கு கால் இல்லை, எனக்கு யாரும் இல்லை, நான் இப்படி நிற்கிறேன்” என்று அவர் தானே பேசிக்கொண்டே இருப்பார். இந்தக் குரல் இன்றும் என்னை அப்படி வதைக்கிறது. அந்தப் பெரியவர் திடீரென்று அந்த இடத்திற்கு வந்தார், அப்படியே எரிமலையைப்போல குமுறினார். அவர் ஒருவர் சாட்சியம்! அந்த ஒற்றைச்சாட்சியம் போதும் அந்த முகாமில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவற்கு! “நாங்கள் என்ன அப்படி கொடுமை செய்தோம் அய்யா; எங்களை வதக்குறாங்களய்யா” என்று சொல்லுகின்றபோது, ‘வதக்குறாங்கள்’ என்கிற அந்த பன்மைக்குள்ளே இந்தியாவும் இருக்கிறது உலக நாடுகளும் இருக்கின்றன என்பதைத்தான் நான் புரிந்துகொண்டேன். ‘வதக்குறாங்களய்யா’ என்பது இலங்கை, இந்தியா, அமெரிக்கா, அமெரிக்காவின் அடிவருடி நாடுகள் எல்லோரும் சேர்ந்து எங்களை ‘வதக்குறாங்களய்யா’ என்கிற அந்தச் சொல்லாட்சிதான் மக்கள் மொழிதான், ‘வதக்குறாங்களய்யா!’ அதனால்தான், நான் அப்படியே ‘வதக்குறாங்களய்யா!’ என்று தலைப்பு வைத்தேன். பல பதிவுகளை நான் நறுக்கிவிட்டேன். யாரையும் காயப்படுத்தக்கூடாது என்பதனால். அங்குள்ள நிலைமைகளை மட்டும் சொல்லுவதுதான் நம்முடைய நோக்கம். இங்குள்ள யார்மீதும் எனக்கு எந்தவிதமான கசப்பும் இல்லை, யாரையும் நாம் அம்பலப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
முகாமில் ஓர் இடத்திலே திரளான கூட்டம், அங்கே நான் போய் நின்றேன், என்னைப் பார்த்து ஓர் இளைஞர் ஓடிவந்தார். என் கையை அழுத்திப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் சொன்னார், நீங்கள் வந்திருப்பதாக சொன்னார்கள், அதனால் தான் இங்கே நான் ஓடிவந்தேன் என்றார். “இந்தப் பாவிகளின் காலடிகள் இந்தப் புனித மண்ணில் பட்டுவிட்டதே!” என்றும் வேதனைப்பட்டார். காங்கிரசு அரசு அல்லது இந்திய அரசு தங்களை அழித்து விட்டது என்று அவர்கள் வெகுவாக நம்புகிறார்கள். அது சாதாரண மக்களின் கருத்தாக இருக்கலாம். ஆனால், அரசியல் பார்வை உள்ளவர்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய தேவையிருக்கிறது. ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு அல்லது தோல்வி என்பதில் வெறும் இந்திய அரசின் கரங்கள் மட்டும் இல்லை, இந்திய அரசு மிகப்பெரிய துரோகத்தை தமிழினத்திற்கு எதிராகச் செய்திருக்கிறது என்பதை ஒருபோதும் மறுக்கமுடியாது. அதை நாடாளுமன்ற அவையிலே என் கன்னி உரையிலே நான் பதிவுசெய்திருக்கிறேன். அதிலே மாற்றுக்கருத்து கிடையாது.
ஆனால், அது மட்டுமா? அதைத்தாண்டி சர்வதேச அரங்கில் நம்முடைய நிலை என்ன? சர்வதேச நாடுகள் நம்மைப்பற்றி என்ன கருதுகின்றன? சர்வதேச அரங்கில் தமிழீழத்தைப் பற்றிய மதிப்பீடு என்ன? சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளைப் பற்றிய கருத்தோட்டம் என்ன? இதையெல்லாம் கவனத்தில் கொண்டு அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வடிவம் பறிபோய் இருக்கலாம், அடுத்த வடிவம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது, போராட்டம் இன்னும் ஓயவில்லை.
நான் ‘முள்வலி’யிலே எழுதுகின்றபோது ஒன்றைப் பதிவுசெய்துள்ளேன். கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில்! ‘இளைஞர்கள் ஓடிவந்தார்கள். அவர்கள் என் கைகளைப் பற்றிக் குலுக்கினார்கள். அண்ணா எங்களுக்காகப் போராடுங்கள் அண்ணா, தொடர்ந்து போராடுவோம் அண்ணா என்று சொன்னார்கள். அந்தச் சொற்களில் ஒரு உறுதியான உண்மை புலப்பட்டது. போர் இன்னும் முடியவில்லை என்கிற உண்மை. இராஜபக்சே சொல்லிவிட்டான் போர் முடிந்துவிட்டது என்று, அந்தத் தம்பிகளின் சொற்களில் ‘போர் இன்னும் முடியவில்லை; ஓயவில்லை! தொடரும்! என்கிற அந்த உண்மையை நான் உணர்ந்தேன்’ என்று ‘முள்வலி’யிலே எழுதியிருக்கிறேன்.
தோழர்களே! தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம்! தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய மாபெரும் விடுதலை இயக்கம். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உலக அரங்கில் 21ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மாபெரும் படைத் தலைவர்! இந்தப் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம், தேக்கம் ஏற்பட்டிருக்கலாம், தோல்வி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நோக்கம் அப்படியே உயிர்ப்போடு இருக்கிறது. அந்த நோக்கத்தை அடைகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் விடுதலைச்சிறுத்தைகளுக்கு இருக்கிறது என்பதைச் சொல்லி இந்த நிகழ்வில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நிறைவுசெய்கிறேன். நன்றி. வணக்கம்.
27-11- 2009 அன்று நடைபெற்ற ‘வதக்குறாங்களய்யா’ ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் எழுச்சித்தமிழர் ஆற்றிய உரை


















0 comments:
கருத்துரையிடுக