சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு எதிர்ப்பு: வணிகர் சங்கங்களின் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு



சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு வணிக நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும், அரசியல் கட்சிகளும் வணிகர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கடந்த ஒரு வார காலமாக நாடாளுமன்ற அவையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும், சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு வணிக நிறுவனங்களை அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்தும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் மிக அழுத்தமாகவும் ஆவேசமாகவும் குரலெழுப்பி வருகிறார். தமிழகத்தில் இன்று ( 1Š12Š2011 ) வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அதன் தலைவர் த. வெள்ளையன் அவர்கள் தலைமையில் சென்னையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெற்றது. இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, தலைவரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் திரு. வெள்ளையன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி ஆதரவைத் தெரிவித்தனர்.

போராட்டத்தை ஆதரித்து வன்னிஅரசு பேசும்போது, ""எமது தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார். ஆனால் சில்லரை வணிகங்களில் வெளிநாட்டினர் நுழைய எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். ஆகவே தலைவர் அவர்களால் வர இயலவில்லை. இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கிராமப் புறங்களில் உள்ளூர் பானமான மாப்பிள்ளை விநாயகர், காளிமார்க் போன்றவற்றை ஒழித்துவிட்டு, பெப்சி, கொக்கோ கோலா போன்ற பன்னாட்டு பானங்களை இந்தியாவுக்குள் கொண்டுவந்தார்கள். அது உள்ளூர் வியாபாரிகளைப் பெரிதும் பாதித்தது. அதைப்போலவே இன்றைக்கு பல மடங்கு பாதிப்பை உருவாக்கும் சில்லரை வணிகத்தில் வெள்ளை ஏகாதிபத்தியம் நுழைகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டு நுழைவுக்கு தமிழக முதல்வர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய அரசு, தமிழகத்தில் கொண்டுவர முயற்சி செய்தால் விடுதலைச் சிறுத்தைகள் அக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தை நடத்துவோம். வணிகர்களின் பேராராட்டங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஆதரவு தரும்''.

இவ்வாறு பேசினார்.

0 comments:

கருத்துரையிடுக