ஒபாமா, ஐ. நா எச்சரிக்கையை பின்பற்றி இந்திய அரசு சிங்கள அரசை எச்சரிக்க வேண்டும் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிங்கள அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் அய். நா. பாதுகாப்புப் பேரவையும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று முதல் முறையாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இருப்பினும் சர்வதேச அழுத்தங்களுக்கு பணியமாட்டோம் என்றும் போரை நிறுத்த மாட்டோம் என்றும் சிங்கள இன வெறி அரசு தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல் மிக மோசமான வகையில் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று இந்திய அரசுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை சிங்களப் படையினர் தொடர்ந்து நடத்தி வருவதும் அம்பலமாகி உள்ளது.
புலிகள் பிடியிலிருந்து தமிழர்களை மீட்கிறோம் என்கிற பெயரில் போர் முனையில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களையும் புலிகளையும் ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கும் தீவிரத்தில் சிங்கள இனவெறி அரசு ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் கொடுமை அதிகரித்து வருகிறது என்றாலும் சிங்கள இனவெறியர்களின் கொலைவெறித்தனமும் பிடிவாதப்போக்கும், சர்வதேசச் சமூகத்திற்குக் கட்டுப்படாத நடவடிக்கைகளும் மிகுந்த அச்சதையும் வேதனையையும் அளிக்கிறது. இந்நிலையில் இந்திய அரசின் அதிகார வர்க்கம் இதனை கண்டும் காணாமல் மெத்தனமாக இருப்பதும் வேடிக்கைப்பார்ப்பதும் சகித்துக்கொள்ள முடியாததாகவுள்ளது.
சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இச்சிக்கலை உள்நாட்டு விவகாரம் எனவும் இதனை அய். நா. பாதுகாப்புப் பேரவை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் முட்டுக்கட்டைப் போட்டு வந்த நிலையையும் மீறி தமது நீண்ட மவுனத்தையும் கலைத்து அமெரிக்க அரசும் அதிபர் ஒபாமாவும் ஆழ்ந்த கவலையுடன் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிற நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலிலும் இந்திய அதிகார வர்க்கம் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது மிகப்பெரும் வரலாற்றுப் பழியை சுமக்கும் நிலையை உருவாக்கும். ஆகவே ஆட்சியை கைப்பற்றும் பரபரப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருந்தாலும் வெளியுறவுத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் அய். நா. பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்தை ஒட்டி ஈழத்தில் போரை நிறுத்தும்படி சிங்கள அரசை எச்சரிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ஈழத்தமிழர்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க சிங்கள அரசுக்கு துணை நிற்போம் என்று இந்திய அதிகார வர்க்கம் கருதுமேயானால், அவ்வாறு செயல்படுமேயானால் அதுவும் பேராபத்தாகவே முடியும். எனவே பொதுமக்களையும் புலிகளையும் பாதுகாக்கும் வகையில் முற்றிலுமாக போர் நிறுத்தம் செய்வதே இப்போதைக்குள்ள உடனடித் தேவையாகும்.
புலிகள் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதி நிதிகள் என்பதை மறுத்துவிட முடியாது. அவர்களை அழித்தொழித்துவிட்டால் வேறு எவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்? அவ்வாறு ஏதேனும் நடந்து விட்டால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஆயுள் கால அடிமைகளாகவே சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடும். எனவே புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் முயற்சி என்கிற நடவடிக்கைகளையும் கைவிட்டு இந்த அளவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்து விட்டு பேச்சு வார்த்தை நடத்துவதுதான் நாகரிகமுள்ள அரசியல் அணுகுமுறையாகும். எனவே இந்திய அரசும் அமெரிக்க அதிபரின் கருத்தை வலுப்படுத்தும் வகையிலும் அய். நா. பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்தை வழிமொழிகிற வகையிலும் சிங்கள அரசை எச்சரித்து உடனடிப் போர் நிறுத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
--------தொல். திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக