வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனின் இறுதி ஊர்வலத்தில் 15,000-க்கும் அதிகமானேர் கறுப்புக்கொடியுடன் பங்கேற்பு
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உட்பட 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கறுப்புக்கொடியுடன் கலந்துகொண்டனர்.
நேற்று சனிக்கிழமை இறந்த "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனின் உடலம் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் மு.க.பெரியசாமி தலைமையில் 1,000-க்கும் அதிகமானோர் மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
பின்னர், மயிலாடுதுறையில் இருந்து வைத்தீஸ்வரன் கோவில் வழியாக சீர்காழி எல்லைக்குச் சென்று, அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வீட்டுக்கு உடலம் கொண்டு செல்லப்பட்டது.
இதனை அறிந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி, ம.நடராஜன், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் கட்சித் தலைவர் துரையரசன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாவட்டத் தலைவர் பரசுராமன், பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் வைத்தியலிங்கம் உட்பட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சோ்ந்தவர்களும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனின் உடலத்துக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.
மாலையில் பழ.நெடுமாறன் தலைமையில் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரன் உடலம் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, ஈசானித் தெருவில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வேல்முருகன், மு.க.பெரியசாமி, உலகநாதன், பத்மாவதி, சிவபுண்ணியம், துரை. ரவிக்குமார், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு, மாநிலத் துணை செயலாளர் பழனிச்சாமி, நாகை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் செல்வராசு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மார்கோனி, கோகுல், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் ஐயப்பன், வன்னியர் சங்கத் துணை பொதுச் செயலாளர் மூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அகோரம், அப்துல் ஹமீட், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சேகர், மாவட்டச் செயலாளர் குணவேந்தன், ஈழவளவன் உட்பட15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கறுப்புக்கொடிகளுடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மருத்துவர் இராமதாஸ் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:
தமிழ் இன உணர்வை நாம் இருந்து தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதற்காக உங்கள் உடலை வருத்திக்கொள்ள வேண்டாம்.
ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் இளைஞர்களை அணித்திரட்டுங்கள். தீக்குளிப்பு சம்பவத்தை யாரும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். 1995 இல் ஈழத் தமிழர்களுக்காகப் பெரம்பலூரில் பெரியார் சிலை முன்பு அப்துல் ரகுப் என்ற இளைஞர் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். அதுபோல் இனி நடக்கக் கூடாது.
தமிழின உணர்வுக்குப் பேட்டியாகப் பேரணி, பொதுக்கூட்டம் என்று பல ஆண்டுகளாக கலைஞர் செயற்பட்டு வருகிறார்.
கலைஞரே நீங்கள் அழைத்தால் போரை நிறுத்துவதாக உறுதி அளித்தால் உங்களுக்காக நாங்கள் ஓடி வருகிறோம்.
இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லை. அரசியல் கட்சியாகவும் இல்லை. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் துளியுமில்லை.
இந்நிகழ்வில் வைகோ உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:
ஈழத் தமிழர்களைப் பாதுகக்க வேண்டும் என்கிற உணர்வு தமிழகம் முழுவதும் உள்ளது என்பது உண்மை. அதற்காக மருத்துவர் இராமதாஸ், தொல்.திருமாவளவன், தா.பாண்டியன் உள்ளிட்ட நாங்கள் யாரும் தீக்குளிப்பை ஊக்குவிக்கவில்லை.
முத்துக்குமார் தீக்குளித்த போதே நாங்கள் மன்றாடி கேட்டுக்கொண்டோம். வாழ வேண்டிய தமிழர்களுக்காக போராடுங்கள்.
எந்த வேதனையைக் காட்டி சொன்னாலும் போர் நிறுத்தம் செய்ய சொல்ல இந்தியா மறுக்கிறது. சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் தந்து உதவுகிறது.
உலக நாடுகள் ஒன்று சேர்ந்து போரை நிறுத்த சொன்னாலும், இந்திய அரசு சொல்லவில்லை.
இந்நிலையில், ரவிச்சந்திரன் தீக்குளிப்பதற்கு முன்பு அவர் மரண சாசனம் எழுதியுள்ளார். அதனை அவரின் பெற்றோர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதைக் காவல்துறையினர் வெளியிட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்று எல்லோருக்கும் தெரியும். இந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யர் வந்தபோது அவருடன் ரவிச்சந்திரன் இலங்கைத் தமிழருக்காக வாதாடியுள்ளார். அவரின் குடும்பமே காங்கிரஸ் குடும்பம் தான், ஆனால், தங்கபாலு ஏன் இதை மறுக்க வேண்டும். கட்சியை கடந்து இன உணர்வுடன் ரவிச்சந்திரன் தீக்குளித்துள்ளார்.
தமிழ் உணர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. தடை போட முடியாது. இப்போதாவது இந்திய அரசு, இலங்கையில் போரை நிறுத்தச் சொல்ல வேண்டும். நாங்கள் பிணத்தை வைத்து அரசியல் செய்யவில்லை.
நேற்று பட்டி தொட்டியெல்லாம் கறுப்புக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. ஆனால், ஆங்கில நாளேடுகளில் ஒரு வரி செய்தி கூட வரவில்லை. ஆங்கில ஊடகங்கள் ராஜபக்சவின் கைக்கூலிகளாக மாறிவிட்டார்களா என்ற ஐயம் உள்ளது.
விடுதலைப் புலிகளை எப்போதும் அரசியலில் கேடு வந்தாலும் ஆதரிப்போம். கட்சி கடந்து ஈழத் தமிழர்களுக்காகப் போராடி வருகின்றோம் என்றார் அவர்.
இந்நிகழ்வில் பழ.நெடுமாறன் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:
இலங்கைத் தமிழருக்காக மாய்த்துக்கொள்வது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். இனி யாரும் செய்யக்கூடாது என்றார்.
இந்நிகழ்வில் திருமாவளவன் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளதாவது:
ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவதற்கு களங்கள் தயாராக உள்ளன. அங்கு வந்து நின்று நிலைத்து உறுதியுடன் போராடுங்கள். யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என்றார் அவர்.
thanks to : puthinam
0 comments:
கருத்துரையிடுக