காங்கிரசை தனிமைப்படுத்துவோம், அ.தி.மு.க.வை அம்பலப்படுத்துவோம் - திருமா அவேசம்
நஞ்சு தோய்ந்த நெஞ்சைக் கொண்டவர் ஜெ - திருமா
இலங்கையில் நடக்கும் போரில் தமிழர்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்று ஜெயலலிதா கூறியதிலிருந்து அவர் எத்தகைய நஞ்சு தோய்ந்த நெஞ்சைக் கொண்டவர் என்பதை தமிழ் சமுதாயம் உணர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் செத்து மடியும் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது. முதல் அமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்துக்கான வாய்ப்பும் இல்லை என்றாகிவிட்டது.
அரசுச் செயலாளர் சிவசங்கர மேனனின் பயணமும் போர் நிறுத்தத்துக்கு பயன்படவில்லை. எனவேதான் எங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்காக மறைமலைநகரில் உண்ணாவிரதம் இருந்தேன். இலங்கையில் தமிழனை அழிக்கும் போது தமிழகத்தில் எந்தவித எதிர்வினையும் ஏற்படவில்லையே என்ற கருத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். மேலும் போராட்டம் நடத்துவதற்கு, முதல் அமைச்சர் கருணாநிதியின் உணர்வுகளையே மத்திய அரசு மதிக்கவில்லையே என்ற பெரும் தாக்கமும் காரணம்.
காங்கிரஸ், அ.தி.மு.க. தவிர மற்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் உளமார்ந்த உணர்வுகளோடு இந்தப் போராட்டத்தை வாழ்த்தினர். இந்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர்களும் எனது கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களும் தொடர்ந்து கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் எமது அறவழிப் போராட்டத்தின் விளைவாக தமிழகம் முழுவதும் பரவிய உணர்ச்சி மயமான கொந்தளிப்பைப் பயன்படுத்தி, அரசியல் உள்நோக்கம் கொண்ட சிலர் எங்கள் கட்சியின் பெயரில் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விரும்பத்தகாத வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து திசை திருப்பிவிடும் வேலையில் சிலர் ஈடுபட முயற்சித்ததை அறிய முடிகிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று போராட்ட வடிவத்தை மாற்றுவதென்று தீர்மானித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தேன். குறிப்பாக, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வலுவான போராட்டத்தை தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து முன்னெடுப்போம் என்று உறுதி அளித்ததை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டேன்.
ஈழத் தமிழர் சிக்கலையொட்டி எழுந்துள்ள அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி தி.மு.க. அரசைக் கவிழ்ந்துவிட ஜெயலலிதா துடிக்கிறார் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் நன்கு அறிவோம். தமிழீழத்துக்கும் தமிழினத்துக்கும் முற்றிலும் எதிராக செயல்படும் ஜெயலலிதாவின் நப்பாசைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் துளியளவும் எண்ணவில்லை.
பிற அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர்கள் விரும்புகிறபடி ஆடுவதற்கு நாங்கள் தொங்கு சதையல்ல. இனநலனை முன்னிறுத்தி நாங்கள் மேற்கொண்ட முடிவு, முதல் அமைச்சருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தால் வருந்துகிறோம். உண்ணாவிரதத்தை, நானும் முதல் அமைச்சர் கருணாநிதியும் இணைந்து நடத்திய நாடகம் என்றும் போரில் தமிழர்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்றும் ஜெயலலிதா கூறினார். இதில் இருந்து, அவர் எத்தகைய நஞ்சு தோய்ந்த நெஞ்சைக் கொண்டவர் என்பதை தமிழ் சமுதாயம் உணர வேண்டும்.
தமிழீழத்தின் நலனில் உடன்பாடுள்ள கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்பது இன்றியமையாதது என்பதால்தான் காங்கிரசை தனிமைப்படுத்துவோம், அ.தி.மு.க.வை அம்பலப்படுத்துவோம் என்று வெளிப்படையாக விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.
நடைமுறைக்கு இது ஒத்துவருமா என்ற கேள்வி எழும். தொடர்புடைய தலைவர்கள், அணிநலனை மறந்து இனநலனை முன்வைத்தால் இது நிகழும். கருத்தின் அடிப்படையில் அணி திரண்டால்தான் அவர்களுக்கு நம்மால் உதவ முடியும். எனவே, போர் நிறுத்தத்தை விரும்பும் அரசியல் கட்சிகள் விரைந்து ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளார்.
3 comments:
ஈழம் சார்பாக ஒத்த கருத்துள்ள கட்சிகள் தம்மிடையே உள்ள சுய விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் ஒரு அணியாகி இயங்குவதே அவர்களின் முதற் கட்டத் தேவையாகும். இதை புரிந்து வைக்கோ, பாண்டியன் போன்றோர்கள் நடப்பதாலேயே இனிவரும் காலங்களில் ஆவது ஈழத்தவகளின் மனங்களிலே உற்சாகம் மலரமுடியும்.
சிங்களத்துக்கு ஆதரவாகவும், தமிழ் மக்களின் சாவை நியாயபடுத்தும் ஆ.தி.மு.காவை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்
உணர்ச்சிகள் சரியானவை.
உழைப்பும் சரியாக இருக்க வேண்டுகிறோம்.
அனைவரையும் அணைத்துச் செல்வதில் முன் நிற்க வேண்டியவருக்குப் பொறுமையும்,
சிந்தித்துப் பொறுமையாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
வீரத்துடன் விவேகமும் இணைந்து முடிவுகள் தமிழின வெற்றிக்கு வழி கோலவேண்டும் என்ற ஒரே முனைப்புடன் போராட வேண்டுகிறோம்.
வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக