வரலாறு


உறுதிமொழி

இந்திய அரசியமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள சமத்துவம், சனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு உண்மையாகவும், நம்பிக்கையாகவும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்போமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதி அளிக்கிறது.

உறுப்பு எண் 1 - இயக்க விவரம்

இயக்கத்தின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை விளக்குவதாகும். சின்னம் என்பது கட்சியின் அடிப்படை முழக்கத்தைக் கொண்ட குறியீட்டைக் குறிக்கும்.

பிரிவு 1: பெயர்

பெயர்
இயக்கத்தின் பெயர் 'விடுதலைச் சிறுத்தைகள்' என்பதாகும். இயக்கம் என்பது 'கட்சி' என்றும் பொருள்படும்.

பிரிவு 2 : சின்னம்

சீறும் சிறுத்தையை மையமாகக்கொண்டு, அதைச் சுற்றிலும் மேல்பாகத்தில் “சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை” என்றும், கீழ்ப்பாகத்தில் “விடுதலைச் சிறுத்தைகள்” என்றும் கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.

பிரிவு 3: கொடி

கட்சியின் கொடி நீலமும் சிவப்பும் கலந்த இருவண்ணங்களைக் கொண்டதாகும். கொடியின் மேல் பகுதியில் வானத்தின் நீல வண்ணமும், கீழ்ப்பகுதியில் குருதியின் சிவப்பு வண்ணமும், சம அளவுகளில் இருக்கும். கொடியின் மையத்தில் ஐந்து முனைகளையுடைய வெள்ளை விண்மீன் பொறிக்கப்பட்டிருக்கும். கொடி மூன்று பங்கு நீளமும் இரண்டு பங்கு அகலமும் கொண்ட அளவுகளில் இருக்கும்.

பிரிவு 4: கொடி விளக்கம்

நீல வண்ணம் - உழைக்கும் மக்களின் விடுதலையைக் குறிக்கும்
சிவப்பு வண்ணம் - புரட்சிகர நடவடிக்கைகளைக் குறிக்கும்
விண்மீன் - விடியலை அடையாளப்படுத்தும் விடிவெள்ளியைக் குறிக்கும்.
விண்மீனின் ஐந்து முனைகள் - இயக்கத்தின் இலக்கை அடைவதற்கு கீழ்வரும் ஐவகை நோக்கங்களின் அடிப்டையில், கட்டமைக்கப்படும் போராட்டக் களங்களைக் குறிக்கும்.
1. சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.
2. வர்க்க அமைப்பை உடைத்து வறுமையைத் துடைப்போம்.
3. மகளிர் விடுதலை வென்று மாண்பினைக் காப்போம்.
4. தேசிய இன உரிமைகள் மீட்டு, ஐக்கியக் குடியரசு அமைப்போம்.
5. வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து வாழ்வுரிமைகள் மீட்போம்.

கடைசி மனிதர்களுக்கான அரசியல் கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாகும். காலமெல்லாம் காடு கழனிகளில் உழைப்பதற்காகவும் தேர்தல் காலத்தில் வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதற்காகவும் மட்டுமே பிறந்தவர்கள் என நெடுங்காலமாய் வஞ்சிக்கப்பட்ட மக்களை அமைப்பாக்கவும், அரசியல் சக்தியாகவும் வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இயங்கி வருகிறது. கடந்த 1999 ம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது, முதன் முதலாய் விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் களத்தில் அடியயடுத்து வைத்தது. 1990 முதல் 1999 வரையில் தேர்தல் புறக்கணிப்பை கடைப்பிடித்து வந்தது. 1999 ல் தேர்தல் அரசியலில் ஈடுபட்டாலும் கடந்த 2-3-2006 அன்றுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாய் பதிவுப் பெற்றது. அதற்கு முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் என்னும் பெயரிலேயே சமூக அரசியல் தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயலாற்றி வந்தது.

1982-ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் துணைவியார் சவீதா அம்மையார் அவர்கள் தலைமையில் பாரதிய தலீத் பாந்தர் இயக்கம் தொடங்கப்பட்டது. அவ்விழாவில் அவ்வியக்கத்தின் இந்திய பொதுச்செயலாளர் திரு.இராம்தாசு அத்வாலே கலந்துக் கொண்டார். வழக்குரைஞர் அ.மலைச்சாமி அவர்கள் அவ்வியக்கத்தின் தமிழ்நாடு மாநில அமைப்பாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். திடிரென்று 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அமைப்பாளர் திரு.அ.மலைச்சாமி அவர்கள் காலமாகிவிட்டார். அவருடைய மறைவையயாட்டி முன்னணி தோழர்கள் சிலரைக் கொண்டு 1989-ம் ஆண்டு திசம்பரின் இறுதியில் வீரவணக்க அஞ்சலி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிய தலீத் பாந்தர் இயக்கத்தின் முன்னணி தோழர்கள் இன்றைய தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை அவ்வியக்கத்தை தலைமை ஏற்று நடத்தும்படிகேட்டுக் கொண்டார்கள். 

அவ்வேண்டுகோளை முதலில் ஏற்க தயங்கினாலும் பின்னர் 1990 சனவரி 21 அன்று கூடிய பாரதிய தலீத் பாந்தர் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன் வந்தார். அவ்வியக்கத்தின் அமைப்பாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் பாரதிய தலீத் பாந்தர் இயக்கம் என்று அழைக்கப்பட்டு வந்ததை மாற்றி இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்று அழைத்தார். 1990-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் இயக்த்தின் முதல் கொடியை மதுரை கோ.புதுVர் பேருந்து நிலையம் அருகில் ஏற்றி வைத்தார். இன்று எமது இயக்கக் கொடி நாளை நமது தேசியக் கொடி. என்ற முழக்கத்தோடு இயக்கக் கொடியை அறிமுகம் செய்தார். 

பின்னர் 1991-ம் ஆண்டு முதல் இந்திய ஓடுக்கப்பட்டோர் சிறுத்தைகள் என்னும் பெயரை விடுதலைச் சிறுத்தைகள் என்று மாற்றி அறிவித்தார். சாதிய வன்கொடுமைகளை எதிர்ப்பதிலும் தமிழ் தேசிய உணர்வுகளை வளர்த்தெடுப்பதிலும் தீவிர முனைப்பு காட்டிய விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் புறக்கணிப்பிலும் மிகுந்த தீவிரம் காட்டி வந்தது.காலப்போக்கில் மக்களின் கட்டளையை ஏற்று 1999 முதல் தேர்தல் அரசியலில் ஈடுப்பட்டு வருகிறது. மறைந்த திரு.மூப்பனார் அவர்களின் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசுடன் நாடாளுமன்ற தேர்தலின்போது, மூன்றாவது அணியில் விடுதைச்சிறுத்தைகள் இடம் பெற்றது. சிதம்பரம், பெரம்பலூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. சிதம்பரத்தில் 2.25 இலட்சம் வாக்குகçயும் பெரம்பலூரில் சுமார் 1 இலட்சம் வாக்குகளையும் பெற்று விடுதலைச்சிறுத்தைகள் ஒரு அரசியல் சக்தி என்று பதிவு செய்தது. 

2001 ஆண்டு சட்ட பேரவை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றது. தமிழகத்தில் 8 தொகுதியிலும் புதுச்சேரியில் 2 தொகுதியிலும் போடடியிடும் வாய்ப்பைப் பெற்றது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள மங்களூரில் போட்டியிட்ட திருமாவளவன் மடடுமே வெற்றிப்பெற்றார். போட்டியிட்ட மற்ற அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குளைப் பெற்று விடுதலைச் சிறுத்தைகள் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியயன்பதை மீண்டும் நிலை நாட்டியுள்ளது. 2004-ம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற பொதுதேர்தலின் போது விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொண்ட முன்முயற்சியில் மக்கள் கூட்டணி என்ற மூன்றாவது அணி உருவாக்கப்பட்டது. 

அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தமிழகத்தில் 8 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் போட்டியிட்டன.சிதம்பரம் தொகுதியில் சுமார் 2 இலட்சத்து 57 ஆயிரம் வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தியாக விடுதலைச்சிறுத்தைகள் தலை நிமிர்ந்தது. இத்தகைய சூழலில் சட்டப்பேரவைக்கான பொதுதேர்தல் 2006-ம் ஆண்டு மே திங்களில் நடைப்பெற்றது. அத்தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் அ.தி.மு.க தலைமையிலான மக்கள் சனநாயக கூட்டணியில் இடம் பெற்று தமிழகத்தில் 9 இடங்களிலும் புதுச்சேரியில் 2 இடங்களிலும் போட்டியிட்டது. அவற்றில் மங்களூர் மற்றும் காட்டுமன்னார்குடியில் வெற்றிப்பெற்றது. மங்களூரில் கு.செல்வப்பெருந்தகை அவர்களும் காட்டுமன்னார்குடியில் து.இரவிக்குமார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களாக பேரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் 2006-ம் ஆண்டு அக்டோபர் திங்களில் தமிழக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் நடைப்பெற்றது.

இத்தேர்தலில் வேட்புமனு தாக்குதலுக்கான கடைசி நேரம் முடிந்த நிலையில் அ.தி.மு.க. செய்த திரை மறைவு வேலைகளை முறியடிக்கும் வகையில் கடைசி நேரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. போட்டியிட் மிகக் குறைவான இடங்களிலும் கணிசமான இடங்களில் வெற்றிப்பெற்றது. கடைசி மனிதனுக்கும் சனநாயகம் எளிய மக்களுக்கும் அதிகாரம் என்ற அடிப்படையில் சனநாயகத்தையும் அதிகாரத்தையும் அடித்தட்டு வரையில் பரவலாக்கும் முயற்சியில் விடுதலைச் சிறுத்தைகள் படிப்படியாய் முன்னேறி வருகிறது. சாதி ஒழிப்பையும், தமிழ் தேசியத்தையும் அடிப்படைக் கொள்கைகளாக முன்னெடுத்து செல்வதில், அகில இந்திய அளவிலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே முதன்மையான கட்சியாக செயலாற்றி வருகிறது. 

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சமூக, அரசியல், பொருளாதார கொள்கைளை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தமது அரசியல் கொள்கைளாக ஏற்றுக்கொண்டு தந்தைப் பெரியார் அவர்களின் வழிக்காட்டுதல்களின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூக மக்களை அரசியல் படுத்துவதையும், அமைப்பாக்குவதையும், கடைமையாகக் கொண்டு செயலாற்றி வருகிறது. எமது நிலைபாடுகளையும், செயல்பாடுகளையும் பரந்துப்பட்ட வெகுமக்களின் பார்வைக்கு வைப்பதில் பெருமைப்படுகிறோம். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்னும் எமது இணையத்தளத்தை பார்வையிடுவோர் எம்மை ஊக்கப்படுத்துவதில் உறுதுணையாக நிற்பீர்கள் என்று பெரிதும் நம்புகிறோம்.