கருநாடகத்தில் வன்முறை விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்

கருநாடகத்தில் வன்முறை
விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்
துணை இராணுவத்தை உடனடியாக கருநாடகத்திற்கு அனுப்பவேண்டும்.
தொல். திருமாவளவன் அறிக்கை


கருநாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தைச் சார்ந்த வாகனங்கள், கடைகள், மற்றும் நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. தமிழகத்தைச் சார்ந்த பேருந்துகள் சரக்குந்துகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வண்டிகள் இதுவரை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பெங்களூர் மற்றும் மைசூர் பகுதிகளில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவோர்கள் மீது கருநாடக அரசு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. மாறாக, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கவேண்டுமென உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. 34 டிஎம்சி தண்ணீரை வழங்கவேண்டிய நிலையிலும் 15 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கிட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவும் மிகக்குறைந்த அளவேயாகும். எனினும், இதற்கு கன்னட இனவெறி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் தமிழக இளைஞர்களைத் தாக்கினர்.

அடுத்து, கருநாடக அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் திருத்தம் செய்து ஆணையிட்டது. அதாவது, 15டிஎம்சி தண்ணீரை 12டிஎம்சி ஆக குறைத்து 17ஆம் தேதி வரையில் வழங்கவேண்டுமென ஏற்கெனவே அறிவித்ததை மாற்றி 20ஆம் தேதிவரையில் தண்ணீரை திறந்துவிடு வேண்டுமென தீர்ப்பளித்தது. கருநாடக அரசின் வேண்டுகோளையேற்று உச்சநீதிமன்றம் இத்திருத்தத்தை செய்துள்ள நிலையிலும், இதனைப் பொறுத்துக்கொள்ளாத சில இனவெறி அமைப்புகள் கருநாடகத்தில் திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளது. ஒரே இடத்தில் நிறுத்திவைத்திருக்கப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த சுமார் 50 பேருந்துகள் 30 லாரிகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. தமிழத்தைச் சார்ந்த உணவகங்கள் இதர நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. பல 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இந்த வன்முறை வெறியாட்டத்தில் சாம்பலாக்கப்பட்டுள்ளன. கருநாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கருநாடக அரசும் கன்னட இனவெறி அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாகவே உள்ளன. இது மாநிலங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாழ்படுத்துவதோடு இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். எனவே, இந்திய பிரதமர் உடனடியாக இந்தப்பிரச்சனையில் தலையிடவேண்டும். தமிழர்களின் உடமைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் துணை இராணுவத்தை உடனடியாக கருநாடகத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும். தென்மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர் பேசவேண்டும். காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனடியாக நியமிக்கவேண்டும். 


அத்துடன், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் விவசாயச் சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வரவேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.


இவண்,
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக